முக்கியச் செய்திகள் கதைகளின் கதை

கோலிவுட்டின் கிரீடம் விஜய் கதை

வழக்கமாக தமிழ் சினிமா ஹீரோக்களின் ரசிகர்கள், தங்களது ஹீரோ, அடுத்து நடிக்கும் படம் எதுவோ அதன் மீது தான், அதிக கவனம் வைத்திருப்பர். ஆனால், நடிகர் விஜய் விஷயத்தில் அது வேறாக இருக்கிறது. தனது 65வது படமான பீஸ்ட் படத்தின் வெற்றிக்குப் பிறகு, தற்போது 66வது படத்தின் படபிடிப்பு நடந்து கொண்டிருக்க, அந்த படத்தின் updateகளை விட, விஜய்யின் 67வது படத்தின் மீதே அனைவருக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதற்கு காரணம் சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் தான். நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபாஹத் ஃபாசில் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கி வெளியான விக்ரம் திரைப்பட்டம், பெரும் ஹிட் அடித்ததோடு 400 கோடி ரூபாய் வசூலையும் கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமான தமிழ் சினிமா templateகளை உடைத்து சினிமா எடுக்கும் புதுமுக இயக்குநர்களில் முக்கிய இடம் பெற்ற லோகேஷ் கனகராஜ், விக்ரம் திரைப்படத்தையும் அதே போன்று, தனது பாணியிலேயே எடுத்தார். இது பெரும் வரவேற்ப்பை பெற்றது. இந்த வெற்றியின் தொடர்ச்சியாக, 2020ல் மாஸ்டர் படத்தின் மூலம் இணைந்த விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணி, விஜய்யின் 67வது படத்தில் மீண்டும் இணைவதாக கூறப்படுவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீஸ்டுக்கு முன், விஜய்யின் 64வது படமான ‘மாஸ்டர்’ படத்தை லோகேஷ் கனகராஜ் தான் இயக்கினார். விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா என பெரும் நடிகர் பட்டாளமே அதில் நடித்திருந்தனர். கொரொனா பெருந்தொற்றுக்கு மத்தியிலும் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி, பலரையும் கவர்ந்தது. புதுமுக இயக்குநரான லோகேஷ் கனகராஜுடன் மாஸ்டர் படத்தில் விஜய் இணைய காரணம், இயக்குநரின் முந்தைய படங்கள் தான். லோகேஷ் கனராஜின் மாநகரம், கைதி ஆகியவை முற்றிலும் வித்தியாசமான கதை களம் கொண்டவை. romance, foreignல் டூயட், item dance என்ற வழக்கமான தமிழ் சினிமா clicheகள் இல்லாமல் கமர்ஷியலாக ஒரு படத்தை ஹிட் ஆக்கலாம் என இந்த இரு படங்களின் மூலம் நிரூபித்து காட்டினார் லோகேஷ் கனகராஜ். விஜய் படங்களை பொறுத்தவரை, இந்த template காட்சிகள் இருந்தும், அவர் நடித்த பல படங்கள் பெரும் ஹிட்டாகி வசூலை வாரி குவித்துள்ளன. இப்படியான எதிரெதிர் templateகளை கொண்ட இருவர், ஒரே படத்தில் இணைகின்றனர் என்றதும், ’மாஸ்டர் திரைப்படம் எப்படியான படமாக உருவாகப்போகிறது?’ என்பதே ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாக இருந்தது. மாஸ்டர் முழுக்க முழுக்க லோகேஷ் கனராஜ் படமாக இருக்க வேண்டும் என்பதோடு, 5 பாடல்கள், 4 சண்டை காட்சிகள், ஹீரோயினுடன் டூயட் என்ற வழக்கமான templateஐ விஜய் விட்டுவிட்டு, முற்றிலும் மாறுபட்ட கதைகளத்தில், லோகேஷ் கனராஜின் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்றே அவரது ரசிகர்கள் உட்பட பலரும் விரும்பினர். மாஸ்டர் திரைப்படமும் வெளியாகி அந்த எதிர்ப்பார்ப்பை கிட்டத்தட்ட பூர்த்திசெய்தது என்றே கூறவேண்டும்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஹீரோ கதாப்பாத்திரம் என்றாலே நேர்மையானவர், தூய்மையானவர் என்பதையெல்லாம் மாற்றி, மது அருந்தும் தவறான பழக்கம் உடைய நபராக ஹீரோ கதாப்பாத்திரம் சித்தரிக்கப்பட்டிருந்தது. நேர்மையான கதாப்பாத்திரங்களில் மட்டுமே விஜய்யை பார்த்து வந்த ரசிகர்கள், ’விஜய்யா இப்படி நடித்திருப்பது?’ என்று வியந்தனர். படத்தின் இரண்டாம் பாதியில், மது அருந்துவது தவறு என்றுணர்ந்து மொத்தமாக getupஐ, மாற்றும் போது அந்த கதாப்பாத்திரத்திற்கு நியாயம் செய்வது போலவே இருந்தது. மொத்த படத்திலும், விஜய் படத்தின் வழக்கமான templateகள் அதிகப்படியாக இல்லாமலே, மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இருப்பினும், மாஸ்டர் படம் தொடர்பான நேர்காணல்களில் எல்லாம், ”இது 50 சதவீதம் விஜய் திரைப்படம், 50 சதவீதம் என்னுடைய படம்” என்பதே லோகேஷ் கனகராஜின் பதிலாக இருந்தது.

அண்மைச் செய்தி: ‘மனைவியைக் கொலை செய்து நாடகமாடிய கணவன்’

மாஸ்டரில் பாதிக்கு பாதி என்றாலும், முழுமையான 100 சதவீத லோகேஷ் கனகராஜ் படத்திலேயே விஜய்யை பார்க்க வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பு. விக்ரம் வெளியாகி, லோகேஷ் cinematic universeக்கான அடித்தளம் இடப்பட்டதை தொடர்ந்தே, தளபதி 67 உருவாகும் என்ற பேச்சுக்கள் எழுந்துள்ளதால் விஜய் ரசிகர்களை அது மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது. 2019ம் ஆண்டு வெளியான கைதி திரைப்படத்தை, தற்போது 2022ல் வெளியாகியுள்ள விக்ரம் படத்துடன் இணைத்து தனக்கென ஒரு cinema universeஐ உருவாக்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ். இதே போல, மாஸ்டர் படத்தில் வரும் விஜய் கதாப்பாத்திரமான jd எப்போது லோகேஷ் cinematic universeல் இணைவார் என்ற கேள்வி சமூக வலைதளமெங்கும் எழுந்தது.

ஆனால், ”மாஸ்டர் தனி படம் என்றும், லோகேஷ் cinematic universeல் jd வரமாட்டார்” என்று லோகேஷ் கனகராஜ் கூறியதும், விஜய் ரசிகர்களுக்கு அது பெரும் ஏமாற்றமானது. இருப்பினும், தளபது 67 படத்தில் விஜயுடன் லோகேஷ் கனகராஜ் இணைந்து, லோகேஷ் cinematic universe படமாக, அதுவும் 100 சதவீதம் லோகேஷ் கனகராஜ் படமாக வெளியாக வேண்டும் என்பதே அனைவரின் எதிர்ப்பார்பாகவும் இருக்கிறது. சமீபத்திய பேட்டி ஒன்றில், ”விஜய்யுடன் இணையும் திரைப்படம், விக்ரம் படத்தை போலவே, ஆக்ஷன் நிறைந்த gangster படமாக இருக்கும்” என லோகேஷ் கனராஜ் தெரிவித்தார். ’விக்ரம் படத்தில் வந்ததை போலவே, டில்லி, விக்ரம், ரோலக்ஸ் என பல கதாப்பாத்திரங்கள் விஜய்யுடன் தளபதி 67ல் இணைந்து நடிக்க வேண்டும், அப்படியொரு multi starrer படமாக விஜய்யின் படம் உருவாக வேண்டும்’ என பல எதிர்பார்ப்புகள் விஜய்ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.

அப்படியொரு திரைப்படம் வெளியாகி ஹிட் ஆகுமேயானால், விக்ரமின் பல கோடி வசூலையும் தாண்டி, pan India படங்களையும் அது மிஞ்சும் என்கின்றனர் சினிமா வட்டத்தினர். இந்த பேச்சுக்கள் ஒருபுறம் எழுந்துக்கொண்டிருக்க, மறுபுறம் தளபதி 66 படத்தில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்தி வருகிறார் நடிகர் விஜய். கார்த்தி, நாகர்ஜுனா, தமன்னா, அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் 2016ம் ஆண்டு வெளியான ‘தோழா’ படத்தை இயக்கிய வம்சி பைடிபள்ளியுடன் தற்போது இணைந்து நடித்து வருகிறார் நடிகர் விஜய். இந்த படத்திற்கு வாரிசு the boss returns என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அரசியல் தொடர்பான படம் என பேசப்பட்டதை அடுத்து, ’வாரிசு’ என்ற தலைப்பின் மூலம் வாரிசு அரசியல் குறித்து கதை களம் அமையுமா? என்ற கேள்வியும் விஜய் படம் குறித்து எழுந்துள்ளது. தில் ராஜு தயாரிப்பில், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் இப்படம் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது. ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், யோகி பாபு, ஷாம், குஷ்பு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் பட்டாளமே இந்த படத்தில் நடித்து வருகிறது. 2023ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று வளர்ந்து வரும் புது இளம் இயக்குநர்களுக்கு பெரும் வரவேற்பு இருக்கிறது என்றால், அதற்கு நடிகர் விஜய்யும் ஒரு காரணம் எனலாம். திறமையான இளம் இயக்குநர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு வாய்பளிக்க விஜய் எப்போதும் தவறியதில்லை. இதுவரை 22க்கும் மேற்பட்ட புதுமுக இயக்குநர்களை அறிமுகப்படுத்திய பெருமை விஜய்க்கே உண்டு. ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ் போன்ற முன்னணி இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றி வந்த விஜய், தற்போது புதிய இளம் இயக்குநர்களுடன் கை கோர்க்க தொடங்கியுள்ளார். இந்த மாற்றம் 2016ம் ஆண்டு தான் தொடங்கியது. ராஜா ராணி என்ற ஹிட் படத்தை கொடுத்த இயக்குநர் அட்லியின் இரண்டாவது படமே நடிகர் விஜய்யுடன் என்று முடிவானது. இதற்கு ராஜா ராணி ஹிட் ஆனது என்பது ஒரு காரணம் என்றாலும், அட்லி இயக்குநர் சங்கரின் உதவி இயக்குநராக இருந்து வந்ததும் மற்றொரு முக்கிய காரணம்.

2012ல் இயக்குநர் சங்கருடன் நண்பன் படத்தில் இணைந்தார் விஜய். அப்போது அந்த படத்தின் இணை இயக்குநராக பணியாற்றிய அட்லி, நடிகர் விஜய்யுடன் நட்பு பாராட்டியுள்ளார். அதுவே, தெறி படத்தின் மூலம் இருவரும் இணைய வழிவகுத்தது. அட்லி என்ற இளம் இயக்குநருடன் இணைந்த விஜய்யின் தெறி திரைப்படம், பெரும் ஹிட் ஆகவே அடுத்தடுத்து, மெர்சல், பிகில் என அடுத்து மூன்று படங்களில் இணையும் வாய்ப்பு அமைந்தது. அந்த படங்களும் பெரும் வசூலை பெற்றன. இந்த இளம் இயக்குநர்கள் வரிசையில்தான், 2020க்குப் பின் விஜய்யுடன் இணைந்தனர் இயக்குநர் லோகேஷ் கனகராஜும், நெல்சனும். இதற்கிடையே இயக்குநர் பரதனுடன் பைரவா, ஏ.ஆர்.முருகதாஸுடன் சர்கார் போன்ற படங்களில் விஜய் நடித்திருந்தாலும், அவை இளம் இயக்குநர்களின் படங்கள் அளவிற்கு வரவேற்ப்பை பெறவில்லை என்கிற பேச்சும் உண்டு. இயக்குநர் அட்லி விஜய்யின் ரசிகர் என்பதாலேயே, அவர் விஜய்யை வைத்து இயக்கும் படத்தின் ஒவ்வொரு frameமிலும் விஜய்யை அசத்தலாகவே காட்டி வந்தார்.

மெர்சல், பிகில் படங்களில் ஒவ்வொரு கெட்டப்பிலும் ஒவ்வொரு மாறுபாட்டை காட்ட முயற்சி செய்திருந்தார். மாஸ்டர் படத்திலும் தாடி மீசையுடன் இருக்கும் கதாப்பாத்திரத்தில் மாஸாகவும், குடி பழக்கத்தை விட்டுவிட்டு வாத்தியார் ஆகும் கதாப்பாத்திரத்தில் கிளாஸாகவும் விஜய் கொடுத்த variationகளை அழகாக காட்சி படுத்தியிருந்தார் லோகேஷ் கனகராஜ்.

நெல்சனுடன் இணைந்த படத்தில் விஜய் ஒரு படி மேலே சென்றுவிட்டார் என்றே கூறவேண்டும். காரணம், அப்படத்தின் கதைக்களம் தான். விஜய், நெல்சன் கூட்டணி இணைந்த பீஸ்ட் படத்தின் பெரும் பகுதி, ஒரே நாளில் ஒரே மாலில் நடக்கும் கதையாகவே இருக்கும். இப்படியான கதையை இதுவரை விஜய் தேர்ந்தெடுத்தது இல்லை. இதற்கு முன்னர் இது போன்ற பல வித்தியாசமான கதைகள் விஜய்யிடம் வந்தபோதெல்லாம், பெரும்பாலும் அதனை தவிர்த்து தான் வந்தார். வழக்கமான template கதையை விட்டுவிட்டு புதுமையாக நடித்தால் அது flop ஆகி விடுமோ என்ற அச்சமாக கூட இருக்கலாம். அதனாலே, கவுதம் மேனன், மணிரத்னம் போன்ற இயக்குநர்களுடன் விஜய் இணைவதெல்லாம் பெரும் இழுபறியாகவே இருந்தது. ஆனால், தற்போது பீஸ்ட் படத்தின் மூலம் ஒரு வித்தியாசமான கதைகளத்தை விஜய் தேர்ந்தெடுத்தது பலரையும் ஆச்சரியமடைய வைத்தது. ”காலத்துகேற்றார் போல மாறாமல், இன்னும் பழைய templateலேயே விஜய் இருக்கிறார்” என்ற பேச்சுக்களுக்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையிலேயே அமைந்தது பீஸ்ட் திரைப்படம்.

விஜய்யின் இந்த அதிரடி மாற்றம் தான், லோகேஷ் கனகராஜுடன் இணையும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரிக்க காரணம். நெல்சன் templateக்கு விஜய் ஒத்துழைத்து நடித்தது போலவே, லோகேஷ் கனகராஜின் templateக்கும் விஜய் ஒத்துழைத்து நடிப்பார் என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது. இப்படியாக காலத்திற்கேற்றார் போல தன்னை மாற்றிக்கொண்டு, இயக்குநர்களுக்கும் தனக்குமான ஒரு chemistryயை எப்போதும் விஜய் பின்பற்றி வருகிறார் விஜய். இதற்கு மற்றுமொரு காரணம், தனது தந்தையும் ஒரு இயக்குநர் என்பதால் தான். சொல்லப்போனால், இன்று பெரும் நடிகராக விஜய் உருவாக ஆரம்பப்புள்ளியாக அமைந்தது, விஜய்யின் தந்தையும் பிரபல இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரின் உந்துதல் தான் என்றால், அது மறுப்பதற்கு இல்லை.

”அறிஞர் அண்ணா, இளமையில் அன்பும் அருளும் உடையவராய் விளங்கினார். நட்பு உணர்வும், நல்ல பண்பும், அவரிடம் இயற்கையாகவே அமைந்திருந்தன”. இது தான் தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் பேசிய முதல் வசனம். 1984ம் ஆண்டு, நடிகர்கள் விஜயகாந்த், விஜி ஆகியோரது நடிப்பில், விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான ’வெற்றி’ என்ற திரைப்படத்தில், நடிகர் விஜய் பேசிய வசனம் தான் இது. தனது 10 வயதிலேயே, தமிழ் சினிமாவில் தடம் பதிக்க, அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தான் காரணமாக அமைந்தார். 1984ல், தான் இயக்கிய ’வெற்றி’ திரைப்படத்தின் flashback காட்சிகளில் விஜயகாந்தின் சிறு வயது கதாப்பாத்திரத்திற்கு யாரை நடிக்க வைப்பது என்று பேச்சுக்கள் எழுந்தபோது, தனது மகன் விஜய்யையே நடிக்க வைக்க முடிவு செய்தார் எஸ்.ஏ.சந்திரசேகர். படத்தில் தந்தையை இழந்த மகனாக, நீதிமன்ற கூண்டில், 10 வயது சிறுவன் விஜய் பேசும் வசனம், ஆக்ரோஷமாகவே இருக்கும்.

இதன் பின்னர், நான் சிகப்பு மனிதன், வசந்த ராகம், சட்டம் ஒரு விளையாட்டு, இது எங்கள் நீதி போன்ற பல படங்களில் குழந்தை கதாப்பாத்திரமாக நடிக்க தொடங்கினார் விஜய். மகனுக்கு மிகப்பெரிய மருத்துவமனை கட்டி கொடுத்து அதில் டாக்டர். விஜய் என்ற பெயருடன், விஜய்யை மருத்துவராக்க வேண்டும் என்பதே தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரின் கனவாக இருந்தது. ஆனால், ’தனக்கு நடிப்பதில் தான் ஆசை இருக்கிறது’ என விஜய் கூறியதும், பெற்றோருக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இரவு முழுவதும் விஜய்க்கும் பெற்றோருக்கும், பெரும் வாக்குவாதம் ஆக, மறுநாள் காலையில், வீட்டில் விஜய் இல்லை என்ற அதிர்ச்சி செய்தி வந்தது. ‘நான் வெளியே செல்கிறேன். என்னை யாரும் தேட வேண்டாம்’ என கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார் விஜய். தாய் ஷோபா சந்திரசேகர் பதறிபோக, தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரோ “பதராதே, உதயம் தியேட்டரில் தான் இருப்பான். அழைத்து வருகிறேன்” எனக் கூறி இருக்கிறார். தந்தை கூறியது போலவே, உதயம் தியேட்டரில் கிழக்குக்கரை படம் பார்த்துக்கொண்டிருந்தார் விஜய். கண்டுபிடித்ததும் “வா போகலாம்” என தந்தை அழைக்க, “இங்க கூட என்ன நிம்மதியா இருக்க விடமாட்டீங்களா?” என அரை மனதுடனே வீட்டிற்கு சென்றுள்ளார் விஜய்.

’அண்ணாமலை’ ரஜினி பேசிய வசனத்தை, விஜய் தன்னிடம் பேசி காட்டியதை எல்லாம் நினைத்துப்பார்த்த தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், ’மகன் சினிமாவின் மீது இத்தனை ஆர்வமாய் இருக்கிறான். அவனுக்கு நிச்சயம் ஒரு இடத்தை அமைத்து தர வேண்டும்’ என முடிவு செய்தார். விஜய்க்கு என பிரத்யேகமாக ஒரு photoshoot எடுத்து, தனது தயாரிப்பில் பெரும் இயக்குநரை வைத்து மகனை அறிமுகம் செய்யலாம் என முடிவு செய்து, பல இயக்குநர்களின் வீடுகளுக்கு சென்றுள்ளார் எஸ்.ஏ.சந்திரசேகர். ஆனால், விஜய்யை வைத்து படம் இயக்க யாரும் முன் வரவில்லை. இறுதியாக தானே விஜய்யை அறிமுகப்படுத்துவது என முடிவு செய்தார் எஸ்.ஏ.சந்திரசேகர். 1992ம் நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகர் விஜய்.

“யார் இவன்? இவனெல்லாம் நடிகனா? இந்த மூஞ்சையெல்லாம் டிக்கெட் வாங்கி பார்க்க வேண்டுமா?” என விஜய்யின் தோற்றம் குறித்து விமர்சனங்கள் எழுந்தன. இது விஜய்யின் காதுகளுக்கும் சென்றது. ஆனால், இதையெல்லாம் கேட்டு துவண்டுபோகவில்லை. தனது திறமையை நிரூபித்தே ஆக வேண்டும் என தீர்க்கமாக இருந்தார். மறுபுறம், ஒரு பெரிய நடிகரை வைத்து, தனது மகனை மேலும் பலரிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று எண்ணிய தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், 1993ம் ஆண்டு நடிகர் விஜயகாந்துடன், விஜய்யை இணைத்து செந்தூரப்பாண்டி என்ற படத்தை உருவாக்கினார். அது பெரும் வரவேற்பையும் பெற்றது. அதன் பின் ரசிகன், தேவா ஆகிய படங்களை தந்தையே இயக்க, ராஜாவின் பார்வையிலே படத்தில் ஜானகி சவுந்தர் என்ற புதிய இயக்குநருடன் இணைந்தார் விஜய். இந்த படம் தான், விஜய், அஜித் ஆகியோர் இணைந்து நடித்த படமாகும். இந்த இணைப்பு மீண்டும் எப்போது நடக்கும் என்பதே தற்போது வரையிலும் அனைவரது எதிர்ப்பார்ப்பாக உள்ளது. பல படங்களுக்கு பிறகு, 1996ல் வெளியான ’பூவே உனக்காக’ திரைப்படம் தான் விஜய்யை ஸ்டார் நடிகராக மக்கள் மனதில் கொண்டு சேர்த்தது. 1994ல் வெளியான ’ரசிகன்’ படத்தில் விஜய்க்கு அளிக்கப்பட்ட இளைய தளபதி பட்டம், பூவே உனக்காக படத்திற்கு பின்னர் தான் தமிழ்நாடெங்கும் பிரபலமானது. விஜய் ரசிகர்கள் எண்ணிக்கையும் அதிகரித்தது.

லவ் டுடே, காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும், குஷி, பிரியமானவளே, பத்ரி என காதல் ததும்பும் பல ஹிட் படங்களை கொடுத்து வந்த விஜய், பகவதி படத்திற்குப்பின் முழு நேர ஆக்ஷன் ஹீரோவாக மாறினார். திருமலை, கில்லி, போக்கிரி, துப்பாக்கி, கத்தி, மாஸ்டர், பீஸ்ட் என தனது வளர்ச்சியை எந்த அளவுகோலையும் வைத்து அளக்க முடியாத அளவு, தற்போது உயர்ந்து நிற்கிறார். கில்லி மூலம் தமிழ் சினிமாவின் முதல் 50 கோடி வசூல் படத்தையும், துப்பாக்கி மூலம் முதல் 100 கோடி வசூல் படத்தையும் கொடுத்தது விஜய் தான். இப்போதும் படத்திற்கு படம், வசூலும், வரவேற்பும் அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறது.

மூன்று முறை தமிழ்நாடு அரசு விருது, 2007ல் டாக்டர் பட்டம், 2018ல் பிரிட்டனில் சர்வதேச விருது என அடுத்தக் கட்டத்திற்கு தன்னை முன்னேற்றிக்கொண்டே இருந்தார் விஜய். எத்தனை உயரம் சென்றாலும், அதனை பெரிதும் வெளிகாட்டிக்கொள்ளாத ”மிகவும் அமைதியான, சாந்தமான நபர் விஜய்” என்ற பெயரையே பெற்றுள்ளார். இந்த அமைதிக்கு, ஒரு பின்கதையும் உண்டு. தனது பள்ளி பருவத்திலிருந்தே மிகவும் சுட்டித்தனமான பையனாகத் தான் வளர்ந்தார் விஜய். அவருக்கு பள்ளியில் ‘godly boy’ என்ற பெயரும் உண்டு. guitar கற்பது, handball விளையாடுவது, போட்டிகளில் பங்கேற்க வடநாடு செல்வது என கலகலப்பாகவே வளர்ந்த சிறுவன் விஜய், தனது தங்கை வித்யாவின் இறப்பிற்கு பின்னரே அமைதியான நபராக மாறினார். “வித்யா” என்று சப்தமாக அழுததோடு அவரது குரலின் வலிமை அடங்கி, சாந்தமாக மாறிவிட்டார் விஜய்” என்று ஒரு பேட்டியில் தெரிவிக்கிறார் தாயார் ஷோபா சந்திரசேகர். ஆனால், விஜய் எப்போதும் அமைதி காத்துக்கொண்டு மட்டுமே இருந்ததில்லை. சமூக பிரச்னைகளுக்காக விஜய் குரலை எழுப்பும் போதெல்லாம், அது national news ஆகவே மாறுகிறது என்பதே உண்மை. இலங்கையில் தமிழர்கள் சித்ரவதையை அனுபவித்த நேரம், இலங்கையில் நடைபெறும் இனப்பிரச்னையை முடிவுக்கு கொண்டுவர வலியுறுத்தி, 2008ல் இலங்கைத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருந்தார் விஜய். அப்போதுதான் முதல் முறையாக விஜய் மீது அரசியல் பார்வை விழுந்தது.

தனது ரசிகர் மன்றங்களை எல்லாம், சமூக பணியாற்றும் இயக்கமாக மாற்ற நினைத்தார். அப்படியாகவே, விஜய் மக்கள் இயக்கம் உருவாகி, பல சமூக பணிகளிலும் மக்களுக்கு உதவ தொடங்கின. ’நீட்’ தேர்வினால் உயிரை மாய்த்துக் கொண்ட அனிதாவின் குடும்பத்தினரை சந்தித்தது, ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தது, கோயில்கள் வேண்டாம் தரமான மருத்துவமனைகள் வேண்டும் என்று மெர்சல் படத்தில் பேசியது என விஜய் பேசிய பல விஷயங்கள் தேசிய மீடியாக்களின் கவனத்தையே ஈர்த்தன. தனது படத்தின் audio launch நிகழ்ச்சியையே அரசியல் பிரச்சார மேடையாக மாற்றினார் விஜய். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக தனது ரசிகர்களை அரசியல் படுத்த, அது தேர்தலிலும் விஜய்க்கு பெரும் பலனை அளித்தது. விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டு விட்டது என விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அறிவித்த நிலையில், விஜய் புதிதாக தொடங்கிய மக்கள் இயக்கத்தின் சார்பில், 2021 உள்ளாட்சித் தேர்தலில் 169 இடங்களில் வேட்பாளர்கள் களம் கண்டனர். இதில் பெருவாரியான இடங்களில் விஜய் மக்கள் இயக்கத்தினர் வெற்றிப்பெற்று, அரசியலில் பழந்தின்று கொட்டைப்போட்ட கட்சிகளுக்கே வியப்பை ஏற்படுத்தினர். வெற்றிபெற்ற வேட்பாளர்களை சந்தித்த விஜய், அவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்ததோடு, எப்படி நேர்மையாக பணியாற்ற வேண்டும் என்ற அறிவுரையையும் வழங்கினார்.

ஆனால், சமீப நாட்களாக விஜய்யின் வழக்கமான அரசியல் template மாறிவருகிறது என்கின்றனர் அரசியல் ஈடுபாடுள்ள சினிமா வட்டத்தினர். வழக்கமாக audio launchல் அரசியல் பேசும் விஜய், பீஸ்ட் படத்திற்கு audio launchஏ இல்லாமல், நேர்காணலுடன் நிறுத்திக்கொண்டது பலருக்கும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. “நான் அரசியல்வாதி இல்லை. படைவீரன் மட்டும் தான்” என பீஸ்ட்டில் விஜய் பேசும் வசனமும், அவரது அரசியல் பார்வை மாறியுள்ளதை காட்டுவதாக பல விமர்சனங்களும் எழுந்தன. இது ஒரு புறம் என்றால், புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி, தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் போன்ற அரசியல் பிரபலங்களை விஜய் சந்தித்து வருவதும் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை உண்டாக்காமல் இல்லை. இதற்கெல்லாம் மேலாக, “விஜய் அரசியல் கட்சி ஆரம்பிக்க போகிறார். அதற்கான வியூகங்களை வகுக்க, பிரசாந்த் கிஷோரையும் சந்தித்துள்ளார்” போன்ற பேச்சுக்களும் சமீபத்தில் எழுந்தன. இப்படியாக தொடர்ந்து ஏதேனும் ஒரு அரசியல் பேச்சு விஜய்யை சுற்றிக்கொண்டு தான் இருக்கிறது. ஆனால், அத்தனை தடைகளையும் தகற்த்து, நதிபோல ஓடிக்கொண்டே இருக்கிறார் விஜய். இருப்பினும், தற்பொது பொதுவெளியிலும், ரசிகர்கள் மத்தியிலும், அரசியல்வாதி விஜய்யை விடவும், நடிகர் விஜய் மீதே கவனம் அதிகம் திரும்பியிருக்கிறது. pan india pan world என பல பாடங்களை இதர மொழி சினிமா துறையினர் சொந்தம் கொண்டாடி வர, அதையெல்லாம் விஜய் போன்ற முன்னணி நடிகர்களால் மட்டுமே முறியடிக்க முடியும் என்பதே தமிழ் சினிமா ரசிகர்கள் நம்பிக்கையாக இருக்கிறது. நெல்சன், லோகேஷ் கனகராஜ் போன்ற மாற்று சிந்தனை இயக்குநர்களுடன் இணைவதன் மூலம், அந்த நம்பிக்கைக்கான விதையை விஜய் விதைத்துவிட்டார் என்றே கூறவேண்டும். நடிகர்களுக்காக இயக்குநர்கள் கதையை மாற்றும் காலம் மறைந்து, கதைக்கு ஏற்றவாறு முன்னணி நடிகர்கள் தங்களை மாற்றிக்கொள்ள தொடங்கியுள்ளது, தமிழ் சினிமாவில் ஆரோக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதற்கான ஆரம்பப்புள்ளியாக விஜய் இருப்பார் என அனைவரும் எதிர்பார்க்கக் காரணம், அதற்கான முழு தகுதியும் திறமையும் கொண்டவர், தளபதி என செல்லமாக பெயரெடுத்த நடிகர் விஜய் என்பதனால் தான்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

உக்ரைன்: வெளியேறிய 1.4 கோடி மக்கள்

Halley Karthik

எஸ்.பி.கே. நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக வருமான வரித் துறையினர் சோதனை

Web Editor

சுல்தான் பட டிரெய்லர் வெளியீட்டு தேதி அறிவிப்பு

G SaravanaKumar