மனைவியை கொலை செய்து வலிப்பு நோய் வந்து இறந்ததாக நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை கொருக்குப்பேட்டை நேதாஜி நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் சாகுல் அமீது. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர்கள் பார்த்த அப்ரின் ரோஸ் என்பவரை திருமணம் செய்துள்ளார். பின்னர் அதே பகுதியில் கணவன் மனைவி இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 8 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது.
கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக சாகுல் அமீதுக்கு சரிவர வேலை இல்லாததால் டி. நகர் பகுதியில் சாலையோரத்தில் துணி வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமையன்று கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது அப்ரின்ரோஸ் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் விசாரித்துள்ளனர். அதற்கு குடும்ப தகராறு எனக்கூறி சாகுல் அமீது அவர்களை அனுப்பிவிட்டார். பின்னர் மீண்டும் குழந்தையின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. அப்போதும் அக்கம் பக்கத்தினர் சென்று விசாரித்துள்ளனர். அதற்கு அப்ரின் ரோசுக்கு வலிப்பு வந்ததாக சாகுல் அமீது கூறியுள்ளார்.
பின்னர் அவரை மீட்டு தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு அப்ரின் ரோசை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்ததாக கூறினர். பின்னர் தகவலறிந்து வந்த போலீசார் அவரது உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக ராயபுரம் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். அங்கு உடற்கூறாய்வு செய்யப்பட்டு வெளியான மருத்துவ அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அப்ரின் ரோஸ் வலிப்பு நோய் காரணமாக உயிரிழக்கவில்லை என்றும், அவர் கழுத்து நெரிக்கப்பட்டு, மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, கணவர் சாகுல் அமீதிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், மனைவியை கொலை செய்து விட்டு நாடகமாடியது தெரியவந்தது. பின்னர் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
– இரா.நம்பிராஜன்








