நடிகர் விஜய் ஆண்டனி மகளின் உடலுக்கு திரைத்துறையினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
தமிழ் திரைப்படங்களின் முன்னணி இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இவரது மனைவி பாத்திமா. இவர் திரைப்பட தயாரிப்பாளர். இவர்களுக்கு 2 மகள்கள். மூத்த மகள் மீரா சென்னையில் உள்ள சர்ச் பார்க் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நேற்றிரவு தந்தை விஜய் ஆண்டனி அறையில் படுத்து தூங்கினார். இன்று 19 ஆம் தேதி அதிகாலையில் பார்த்த போது மீரா மின்விசிறியில் தொங்கி உயிரை மாய்த்து கொண்டது தெரியவந்தது.
உடனே வீட்டு பணியாளர் உதவியோடு உடலை கீழே இறக்கி கார் மூலம் காவேரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றளர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
பின்னர் உடற்கூறு ஆய்வுக்கு பிறகு மீராவின் உடல் டிடிகே சாலையில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.
இதுதொடர்பாக குற்றவியல் நடைமுறை சட்டம் 174 (இயற்கைக்கு மாறான மரணம்) பிரிவின் அடிப்படையில் தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனியார் பள்ளியில் மீரா பொருளாதார பாடப் பிரிவு எடுத்து படித்து வந்தார். பேட்மிட்டன் விளையாட்டில் ஆர்வம் கொண்டுள்ள மீரா, நேற்று விடுமுறை என்பதால் தோழிகளை சந்தித்து விட்டு வந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் கடந்த ஆறு மாதம் காலமாக தனியார் மருத்துவமனையில் மன அழுத்தத்திற்காக மீரா சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மீரா மன அழுத்தத்துடன் இருப்பதற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக இந்த மன அழுத்தத்தின் காரணமாக மட்டுமே உயிரை மாய்த்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து மீராவின் தோழிகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
மீராவின் செல்போனை போலீசார் தொழில்நுட்பரீதியாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அவரது சமூக வலைதள பக்கங்கள் மற்றும் போட்டோக்கள் வீடியோக்கள் குறுஞ்செய்திகள் உள்ளிட்டவற்றையும் போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக உயிரை மாய்த்து கொள்வதற்கு முன்பு ஏதேனும் கடிதம் அல்லது வீடியோ பதிவிட்டுள்ளாரா எனவும் போலீசார் ஆய்வு செய்கின்றனர்.
பிச்சைக்காரன்-2 படத்தின் படப்பிடிப்பின் போது விபத்தில் சிக்கி அதிர்ஷ்டவசமாக விஜய் ஆண்டனி உயிர் பிழைத்தார். இதன் பிறகு ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி குளறுபடிக்கு விஜய் ஆண்டனி தான் காரணம் என சமூக வலை தளங்களில் பரபரப்பட்டதற்கு அவர் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். இந்த சர்ச்சையில் சிக்கிய நிலையில் தற்போது விஜய் ஆண்டனியின் மகள் உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் தமிழ் சினிமா உலகில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.