ராஜாக்கண்ணு மனைவி பார்வதி அம்மாளுக்கு, நடிகர் சூர்யா 15 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள முதனை கிராமத்தில் கடந்த 1993ம் ஆண்டு நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, ’ஜெய்பீம்’ திரைப்படம் உருவாக்கப் பட்டது. உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டதை நியூஸ் 7 தமிழ் முதன்முதலாக வெளி கொண்டு வந்தது. இதற்கிடையே, வறுமையில் வாடும் ராஜாகண்ணுவின் மனைவி பார்வதி அம்மாளுக்கு, 10 லட்சம் ரூபாயை வழங்குவதாக நடிகர் சூர்யா அறிவித்திருந்தார்.
இந்நிலையில், நடிகர் சூர்யாவை, தியாகராய நகரில் உள்ள அவரது வீட்டில் பார்வதி அம்மாள் நேரில் சந்தித்தார். அப்போது, 2டி நிறுவனம் சார்பில் 5 லட்சம் ரூபாயும், சூர்யா சார்பில் 10 லட்சம் ரூபாயும் சேர்த்து, 15 லட்சம் ரூபாய்க்கான காசோலையை நடிகர் சூர்யா வழங்கினார்.
இதனை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பார்வதி அம்மாளிடம் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாலகிருஷ்ணன், சூர்யா அளித்த 15 லட்சம் ரூபாய் வைப்புத்தொகையாக வங்கியில் செலுத்தப்படும் என்றும், அதிலிருந்து கிடைக்கும் வட்டித்தொகையை மாதந்தோறும் பார்வதி அம்மாள் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.








