பைக்கில் சென்ற பிரபல நடிகர் படுகாயம்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

மோட்டார் சைக்கிளில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் பிரபல நடிகர் படுகாயமடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பிரபல கன்னட நடிகர் சஞ்சாரி விஜய். இவர் ’ரங்கப்பா ஹோபிட்னா’, ’தசவலா’,…

மோட்டார் சைக்கிளில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் பிரபல நடிகர் படுகாயமடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பிரபல கன்னட நடிகர் சஞ்சாரி விஜய். இவர் ’ரங்கப்பா ஹோபிட்னா’, ’தசவலா’, ’ஹரிவு’, ’கில்லிங் வீரப்பன்’, ’நானு அவனல்ல..அவளு’உட்பட பல கன்னட படங்களில் நடித்துள்ளார். ’நானு அவனல்ல.. அவளு’ படத்தில் திருநங்கை யாக நடித்ததற்காக தேசிய விருதை பெற்றுள்ளார்.

இவர் தனது நண்பரின் வீட்டுக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் பெங்களூரில் உள்ள தனது வீட்டுக்கு நேற்றுத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்தில் அவர் தலையிலும் தொடையிலும் பலத்த காயமடைந்தார். இதையடுத்து அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் உடல் நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதுபற்றி சஞ்சாரி விஜய் சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனையின் மருத்துவர் அருண் நாயக் என்பவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, விஜய்யின் உடல் நிலை மோசமாக இருக்கிறது. மூளையில் ரத்தம் உறைந்துள்ளது. அறுவை சிகிச்சை செய்துள்ளோம். இன்னும் 48 மணி நேரத்துக்குப் பிறகே எதுவும் சொல்ல முடியும் என்று தெரிவித்தார்.

இதையடுத்து அவர் விரைவில் நலம் பெற வேண்டி சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் கன்னட சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.