தமிழ் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் டாணாக்காரன். காவலர்கள் பயிற்சிப் பள்ளியில் நடைபெறும் உரிமை மீறல்களை உண்மைத் தன்மை குறையாமல் அதே சமயம் அழுத்தமாக பதிவு செய்திருந்தது. விக்ரம் பிரபு, லால், எம்.எஸ்.பாஸ்கர் உள்பட படத்தில் நடித்த அனைவரின் பாத்திரமும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தது
குறிப்பாக படத்தில் முருகன் என்ற கதாபாத்திரத்தில் நடித்த கார்த்திக் கண்ணனின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. படத்தின் க்ளைமாக்ஸில் திருப்புமுனையே இவரை வைத்துதான் நிகழும். படத்தில் தன்னை பலரும் நிராகரிக்கும்போதும், தன் மீது நம்பிக்கை வைக்கும் விக்ரம் பிரபுவிடம் உருகிப் பேசும் காட்சிகளாகட்டும் நெகிழவைக்கிறார். சண்டேவில் தன்னுடைய சினிமா அனுபவங்களை ஜாலியாக நம்மிடம் பகிர்ந்துகொண்டார் கார்த்திக் கண்ணன்.
“எல்லோரையும் போலதான் எனக்குள்ளும் சினிமா ஆசை வந்தது. 2011 ஆம் ஆண்டு முதல் நண்பர்களுடன் சேர்ந்து தீவிரமாக சினிமா வாய்ப்புகளை தேட ஆரம்பித்தேன். 2017ஆம் ஆண்டு இயக்குனர் தமிழை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஞாயிற்றுக் கிழமைகளில் கிரிக்கெட் விளையாடச் செல்வேன். அப்போது, என்னுடைய டீமில் இருந்த உதவி இயக்குனர் ஒருவருடன் நட்பு ஏற்பட, அவர் தமிழிடம் அறிமுகப்படுத்தினார். டாணாக்காரன் திரைப்படத்திற்கு நடந்த ஆடிஷனில் கலந்துகொண்டு தேர்வானேன்” என்று சுருக்கமாக முடித்த கார்த்திக், படப்பிடிப்பு தளத்தில் நடந்தது குறித்தும் பகிர்ந்துகொண்டார்.
“வேலூரிலுள்ள ஒரு மைதானத்திற்குள்ளேயே 55 நாட்கள் இரவு பகலாக படப்பிடிப்பு நடைபெற்றது. முதல் சில நாட்கள் தெரியவில்லை. போகப்போக வெயில் சுட்டெரித்துவிட்டது. அதுவும் காலை தொடங்கி, மாலை வரை வெயிலில் ஓட வேண்டும், பயிற்சி எடுக்க வேண்டும் என்றால் சொல்லவா வேண்டும்…க்ளைமாக்ஸ் காட்சிகள் எடுக்கும்போதெல்லாம் உச்சபட்ச வெயில் இருந்தது. அனல் காற்று அடித்ததால் யாராலும் தாங்க முடியவில்லை. வேலூர் வெயிலில் வெந்தேவிட்டோம். அப்போது உழைத்த உழைப்பிற்கு இப்போது கைமேல் பலன் கிடைத்துள்ளது. அனைவரின் பாராட்டுக்களும், வாழ்த்தும் கஷ்டங்களையும் மறக்கச் செய்துவிட்டது” என்றவர் மேலும்,
என்னுடைய அளவுக்கு சரியான ஷூவும் கிடைக்கவில்லை. சிறிய ஷூவை அணிந்து நடித்ததால் காலில் காயம் ஏற்பட்டுவிட்டது. புதிதாக நடிக்க வந்தேன் என்பதால் அதனை யாரிடம் சொல்ல வேண்டும் என்று கூட தெரியவில்லை, ஆனாலும் நடித்தேன். காயமடைந்ததை தெரிந்துகொண்ட இயக்குனர் தமிழ் சார் எனது அளவுக்கு ஷூவை ரெடி செய்து கொடுத்தார்” என்றார்.
நடிப்பிற்கு கிடைத்த ரெஸ்பான்ஸ் பற்றி நாம் கேட்க, படத்தின் திருப்புனை கதாபாத்திரத்தில் நான் வந்திருந்தாலும், இது என் வாழ்க்கையிலேயே திருப்புமுனைதான் என்கிறார். “11 வருட ஓட்டத்திற்கான பலன் இது. படத்தை பார்த்துவிட்டு நடிகர் பிரபு சார் பாராட்டியதாக விக்ரம் பிரபு சார் சொன்னார். சிறிய வயதிலிருந்து நாம் திரையில் பார்த்து வியந்த நடிகர் நம்மை பாராட்டுகிறார் என்பது மகிழ்ச்சியாக இருந்தது” என்று கூறினார்.
“படத்தில் நடிப்பதற்காக 2017ம் ஆண்டு நல்ல சம்பளத்தில் இருந்த வேலையை விட்டுவிட்டேன். டாணாக்காரன் படத்தில் நடித்து முடித்த பிறகும் கூட வேலை கிடைக்கவில்லை. அதனால் பொருளாதார ரீதியாக கஷ்டப்பட வேண்டியிருந்தது. ஆனாலும், இத்தனை கஷ்டத்திற்கும் ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது” என்ற கார்த்திக், நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. டாணாக்காரனில் நல்ல பெயர் கிடைத்தாலும் இதுவரை எந்த இயக்குனரும் என்னை அணுகவில்லை. கண்டிப்பாக வாய்ப்பு கொடுப்பார்கள் எனக் கூறும் அவரின் வார்த்தைகளில் அத்தனை நம்பிக்கை.
உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் Body Shaming – ஐ கண்டிப்பாக எதிர்கொண்டிருப்பார்கள்….அதனை எப்படி எதிர்கொண்டீர்கள் என கேட்டோம். “உடல் எடை அதிகமாக இருக்கும் அனைவருமே உடல் ரீதியிலான கேலிகளை எதிர்கொள்கின்றனர், நானும் விதிவிலக்கல்ல என சீரியஸாக கூறினார்.
“என்னுடைய நலன் சார்ந்து அறிவுரை கூறுபவர்களை கவனத்தில் எடுத்துக்கொள்வேன், கேலி செய்பவர்களை அப்படியே விட்டுவிடுவேன். என்னுடைய உடல் எடைதான் என்னை ஒரு சக்சஸ் மனிதனாக காட்டியுள்ளது. என்னுடைய வாழ்க்கையை நான் வாழ்கிறேன். கேலி செய்பவர்களுக்காக நான் ஏன் வாழ வேண்டும். என்னை கேலி செய்தவர்களுக்கு என்னுடைய நடிப்பால் பதில் சொல்லியுள்ளேன்” என்று கேலி செய்தவர்களுக்கு பதிலும் கூறி உரையாடலை நிறைவு செய்தார்.
உரையாடல்: த.எழிலரசன்








