சென்னைப் பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவாலை நடிகர் ஆர்யா சந்தித்துப் பேசினார்.
நடிகர் ஆர்யா தன்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி 70 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக ஜெர்மனியைச் சேர்ந்த விட்ஜா எனும் பெண்மணி குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் அலுவலகத்தில் பிப்ரவரி மாதம் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் ஆகஸ்ட் 10 ஆம் தேதி நடிகர் ஆர்யாவை நேரில் வரவழைத்து விசாரணை நடத்தினர். இதனையடுத்து ஆள்மாறாட்டம் செய்து மோசடியில் ஈடுபட்டதாக புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த முகமது அர்மான் மற்றும் முகமது ஹுசைனி ஆகியோர் கைது செய்யபட்டனர்.

இதனையடுத்து ஜெர்மனி பெண் தரப்பு வழக்கறிஞரான ஆனந்தன் செய்தியாளர்களை நேற்று சந்தித்து பேசினார். அப்போது அவர், ஆர்யா போல் நடித்து மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட இருவரும் 3வது மற்றும் 4 ஆவது குற்றவாளி என கூறிய அவர், முதல் குற்றவாளியாக நடிகர் ஆர்யா மற்றும் இரண்டாவது குற்றவாளியாக ஆர்யாவின் தாயார் ஜமீலாவின் பெயரை முதல் தகவல் அறிக்கையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சேர்த்துள்ளதாகவும் அவர்கள் இன்னும் கைது செய்யாமல் இருக்கிறார்கள் என தெரிவித்தார். நடிகர் ஆர்யா தனது செல்போன் எண்ணில் இருந்து ஜெர்மனி பெண்ணிடம் பேசி, நட்சத்திர அந்தஸ்தில் தான் இருப்பதால் எனது மேலாளர் முகமது அர்மான், ஹூசைனி வங்கி கணக்கில் பணத்தை செலுத்துமாறு கூறியுள்ளார்.
இதுதொடர்பான ஆதாரங்களும் தங்களிடம் இருப்பதாக அவர் கூறினார். உடனடியாக ஆர்யா மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என அவர் கூறினார். இந்த நிலையில் இன்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலை நேரில் சந்தித்து ஆர்யா பேசியுள்ளார்.







