இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னைக்கு அருகில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பாக 110 புதிய அறிவிப்புகளை அமைச்சர் மா சுப்பிரமணியன் வெளியிட்டார். அதில், 19 மாவட்டங்களில் அரசு மருத்துவமனைகள், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகளாக மாற்றி அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 8 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு 139 கோடியே 80 லட்சம் ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், சென்னைக்கு அருகில் இந்தியாவிலேயே முதன்முறையாக சித்த மருத்துவ பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும் என்றும், அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார்.
3 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் 100 சுகாதார நிலையங்களில் முதியோர் நலனுக்கான சித்தர் நிறைவாழ்வு மையம் ஏற்படுத்தப்படும் என தெரிவித்த அவர், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களின் நலனை பாதுகாக்க மக்கள் நலப்பதிவு எனும் சுகாதார தகவல் இயங்குதளம் உருவாக்கப்படும் எனக்கூறினார். மேலும், 2 கோடி ரூபாய் செலவில், கொசுக்களால் பரவும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் வலுப்படுத்தப்படும் என்றும், உபயோகித்த சமையல் எண்ணெயின் மறு பயன்பாட்டை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு அதிலிருந்து பயோ-டீசல் உற்பத்தி செய்வது உறுதிப்படுத்தப்படும் என்றும், புதிய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







