கேபிள் டிவிக்காக அதிக கட்டணம் வசூல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு கேபிள் டிவி நிறுவன தலைவர் குறிஞ்சி சிவக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்ற பின், முதன்முறையாக ஈரோடு சென்ற குறிஞ்சி சிவக்குமாருக்கு கருங்கல்பாளையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, பன்னீர் செல்வம் பூங்காவில் உள்ள பெரியார், அண்ணா மற்றும் கலைஞர் சிலைகளுக்கு மாலை அணிவித்து அவர் மரியாதை செலுத்தினார். பின்னர் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்த குறிஞ்சி சிவக்குமார், கடந்த 10 ஆண்டுகளாக அரசு கேபிள் டிவி நிறுவனம் மிகவும் நஷ்டத்தில் இயங்கி வருவதாக கூறினார்.
அரசு கேபிள் கட்டண சேனல்களை அதிகப்படுத்தி மக்களுக்கு தேவையான சேனல்கள் மற்றும் இணையவசதியை அதிகப்படுத்துவதே தங்களது நோக்கம் எனக் கூறிய அவர், அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.







