உதகையில் எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி விடுதிகளாக பயன்படுத்திய 3 வீடுகளுக்கு உதகை வட்டாட்சியர் தலைமையில் அதிகாரிகள் சீல் வைத்தனர்.
நீலகிரி மாவட்டம், உதகையில் கோடை சீசன் துவங்கிய நிலையில் பிற மாவட்டங்கள், மாநிலங்களிலிருந்தும் சுற்றுலா பயணிகள் நாள்தோறும் வருகை புரிந்து தங்கி சுற்றி பார்த்து வருகின்றனர்.பள்ளிகளுக்கு விடுமுறை, சமவெளி பகுதிகளில் நிலவும் வெயிலின் காரணமாக கடந்த ஒரு வாரத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்ததால் விடுதிகள் நிரம்பி வழிகின்றன.
மேலும் வீடுகளுக்கு அனுமதி பெற்று, எவ்வித முறையான அனுமதியும், அடிப்படை வசதிகளும் இன்றி அதிக கட்டணங்களில் வீடுகள், விடுதிகளாக செயல்படுத்தப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் வந்துள்ளது. இதன் அடிப்படையில் உதகை வட்டாட்சியர் ராஜசேகர் தலைமையில் ஆய்வு மேற்கொண்டு உதகை அருகே உள்ள சவுத்விக் பகுதியில் வீடுகள் எவ்வித அடிப்படை வசதிகளின்றி அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டு விதிகள் நடத்தி வருவது தெரியவந்தது.
வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் மூன்று வீடுகளுக்கு சீல் வைத்து அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டார். மேலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
—-அனகா காளமேகன்







