முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

புகையிலை பயன்பாட்டை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை – அன்புமணி ராமதாஸ்

புகையிலை பயன்பாட்டை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் தேவை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் 2019ஆம் ஆண்டில் நிகழ்ந்த சுமார் 91.60 லட்சம் உயிரிழப்புகளில், 66% அதாவது 60.46 லட்சம் உயிரிழப்புகள் இதயநோய், நுரையீரல் சார்ந்த சுவாச நோய்கள், புற்றுநோய், நீரிழிவு ஆகிய தொற்றா நோய்களால் நிகழ்ந்திருப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் (கீபிளி) ஆய்வில் தெரியவந்துள்ளது.
வாழ்க்கை முறை மாற்றமும், புகையிலை பயன்பாடும் தான் இதற்கு காரணம் என்பது உறுதியாகியுள்ள நிலையில், அவற்றைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காதது ஏமாற்றமளிக்கிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதய நோய்கள், நீரிழிவு நோய்களுக்குப் பெரும்பாலும் வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தான் காரணம் ஆகும். சுவாச நோய்களுக்கு வாழ்க்கை முறை மாற்றங்கள் மட்டுமின்றி, காற்று மாசு மிக முக்கிய காரணம். ஆஸ்துமா, நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் ஆகியவை தான் இந்தியாவில் அதிக அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தும் சுவாச நோய்கள் ஆகும். சுவாச நோய்களால் ஏற்படும் உயிரிழப்புகளில் உலகில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்திய மக்கள் தொகையில் ஒவ்வொரு லட்சம் பேருக்கும் 113 பேர் சுவாச நோய்களால் ஆண்டு தோறும் உயிரிழக்கின்றனர். இது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத எண்ணிக்கையாகும்.

புகையிலை பயன்பாட்டின் தீயவிளைவுகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த புகையிலை பொருட்களின் உறைகள் மீது எச்சரிக்கை படங்கள் அண்மைக்காலமாக பெரிய அளவில் அச்சிடப்படுவதை பாராட்டியுள்ள உலக சுகாதார நிறுவனம், புகையிலை பொருட்கள் மீது அதிக வரி விதிக்கப்படாதது, பொது இடங்களில் புகைப்பிடிக்க விதிக்கப்பட்ட தடை முறையாக செயல்படுத்தப்படாதது
ஆகியவை குறித்து ஏமாற்றம் தெரிவித்துள்ளது. புகையிலை பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்காக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ள நடவடிக்கைகள் அனைத்தையும் இந்தியாவில் அறிமுகப்படுத்தியவன் நான் தான் என்பதில் பெருமிதம் அடைகிறேன்.

அதேநேரத்தில், புகையிலை பயன்பாட்டை கட்டுப்படுத்த அறிமுகப்படுத்தப்பட்ட சீர்திருத்தங்கள் தீவிரமாக செயல்படுத்தப்படாதது மிகவும் வருத்தமளிக்கிறது.
புகையிலைப் பொருட்களின் பயன்பாட்டை குறைக்கும் வகையில் அவற்றின் மீது அதிக வரி விதிக்கும் முறையை நான் மத்திய சுகாதார அமைச்சராக இருந்த போது அறிமுகப்படுத்தினேன். ஆனால், அந்த நடைமுறை தொடரவில்லை. சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களின் சில்லறை விலையில் 75% வரியாக இருக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. ஆனால், இந்தியாவில் 28%
ஜி.எஸ்.டி வரி மற்றும் கூடுதல் தீர்வைகளையும் சேர்த்து 52% வரி மட்டுமே வசூலிக்கப்படுகிறது. இது போதுமானதல்ல.

இந்தியாவில் இப்போது ரூ.15க்கு விற்பனை செய்யப்படும் ஒரு சிகரெட்டின்
விலையை குறைந்தது ரூ. 22 ஆக உயர்த்தினால் மட்டும் தான் அதன் பயன்பாட்டை குறைக்க முடியும். அதேபோல், பொது இடங்களில் புகை பிடிக்க விதிக்கப்பட்ட தடையை கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு உள்ளிட்ட எந்த அரசும் முறையாக செயல்படுத்தவில்லை. பெண்கள், குழந்தைகளுக்கு இதய நோய், நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கு பொது இடங்களில் புகை பிடிப்பது தான் முக்கிய
காரணமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அதைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம்.

தொற்றா நோய்களால் ஏற்படும் உயிரிழப்புகளை 2030ஆம் ஆண்டுக்குள் மூன்றில் ஒர் பங்கு குறைக்க வேண்டும் என்பது நீடித்த வளர்ச்சி இலக்குகளில் ஒன்றாகும். ஆனால், அதை நோக்கி இந்தியா உள்ளிட்ட எந்த நாடும் பயணிக்கவில்லை என்பது தான் வேதனையளிக்கும் உண்மையாகும். இதய நோய்கள், நீரிழிவு நோய், சுவாச நோய் ஆகியவற்றை தவிர்ப்பது/கட்டுப்படுத்துவது குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், அதற்கான நடவடிக்கைகளையும் மத்திய, மாநில அரசுகள் எடுக்க
வேண்டும். புற்றுநோயைத் தடுக்கும் நோக்கத்துடன் புகையிலை பயன்பாட்டை கட்டுப்படுத்தவும் எனது பதவிக் காலத்தில் தொடங்கப்பட்ட நடவடிக்கைகளை அரசுகள் தீவிரமாக செயல்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இன்று மாலை அறிவிக்கப்படுகிறது புதிய அமைச்சரவை?

Halley Karthik

நியாண்டர்தால் மனிதர்கள் குறித்து ஆராய்ச்சி செய்த ’ஸ்வாண்டே பாபோ’ என்ற விஞ்ஞானிக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது

Niruban Chakkaaravarthi

பாகிஸ்தானில் சீக்கிய மன்னர் ரஞ்சித் சிங் சிலை தகர்ப்பு: இந்தியா கடும் கண்டனம்

Gayathri Venkatesan