பில்கிஸ் பானு வழக்கில் விடுதலை செய்யப்பட்ட குற்றவாளிகளில் 3 பேர், சரணடைய கால அவகாசம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
2002 குஜராத் கலவரத்தின் போது 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். 3 வயது குழந்தை உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கின் குற்றவாளிகளான 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், இந்த கொலை வழக்கில் 11 பேர் குற்றவாளிகளாக மும்பை உயர்நீதிமன்றம் அறிவித்தது. ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளை ஆகஸ்ட் 15, 2022 அன்று குஜராத் பாஜக அரசு விடுவித்தது.
குற்றவாளிகள் முன் கூட்டியே விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து பில்கீஸ் பானு உச்ச நீதிமன்றத்தை அணுகினார். அவர்களின் விடுதலையை ரத்து செய்யக்கோரி பலர் பொதுநல வழக்குகளும் தாக்கல் செய்தனர்.
பில்கிஸ் பானு மீதான கூட்டுப் பாலியல் வன்கொடுமை மற்றும் 2002 கலவரத்தின் போது நிகழ்த்தப்பட்ட குற்றங்களுக்காக ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த 11 கைதிகளை முன்கூட்டியே விடுவித்த குஜராத் அரசின் முடிவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இதையும் படியுங்கள் : “மாநிலங்களுக்கான நிதியை பிரதமர் மோடி குறைக்கச் சொன்னார் ” – நிதி ஆயோக் தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு
நீதிபதி நாகரத்னா தலைமையிலான அமர்வின் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
“பில்கீஸ் பானு வழக்கு விவகாரத்தில் குற்றம் நடந்தது ஒரு மாநிலமாக இருந்தாலும், வழக்கு நடத்தப்பட்டது மகாராஷ்டிரா மாநிலத்தில் தான். எனவே குற்றவாளிகளின் தண்டனை காலத்துக்கு முன்னரே அவர்களை விடுவிக்கும் போது வழக்கு நடைபெற்ற மாநிலத்தை சம்மந்தப்பட்ட அரசு ஆலோசனை கேட்க வேண்டும்.
பில்கீஸ் பானு குற்றவாளிகள் விவகாரத்தில் நிவாரணங்களை வழங்க குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை. பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகள் என்பது மிகவும் முக்கியம், பெண்களின் மரியாதை முக்கியம், பெண்கள் மரியாதைக்குரியவர்கள். பில்கீஸ் பானு வழக்கில் குற்றவாளிகளை விடுவித்த குஜராத் அரசின் முடிவை ரத்து செய்யப்படுகிறது” என உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. மேலும் விடுவிக்கப்பட்டுள்ள குற்றவாளிகள் இரண்டு வாரத்திற்கும் சிறை அதிகாரிகள் முன்பு சரணடைய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவு குறித்த அதிகாரபூர்வ தகவல் ஏதும் இதுவரையில் கிடைக்கவில்லை என்று சம்பந்தப்பட்ட மாவட்ட கண்காணிப்பாளர் பல்ராம் மீனா கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், குற்றவாளிகள் 3 பேர் தரப்பில், சரணடைய மேலும் அவகாசம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.









