இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் தமிழ்நாட்டில் இருந்து அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்து பொருட்களை அனுப்பி வைக்க அனுமதி கேட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில், தமிழ்நாடு அரசு வழங்கும் உணவு மற்றும் மருந்து பொருட்கள் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்படும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதில் கடிதம் எழுதியுள்ளார்.
கடும் நெருக்கடியை சந்தித்து வரும் இலங்கை மக்களுக்கு உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை தமிழ்நாட்டிலிருந்து அனுப்பி வைக்க உரிய அனுமதிகளை வழங்க மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 29 ஆம் தேதி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். ஒவ்வொரு நாளும் அங்கு நிலமை மோசமடைந்து வருவதை சுட்டிக்காட்டி அங்குள்ள மக்களுக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இது தொடர்பாக, மார்ச் 31-ம் தேதி, தான் ஏற்கெனவே அளித்த கோரிக்கை மனுவின்மூலம், இப்பிரச்சினையை பிரதமரின் கவனத்திற்குக் கொண்டு சென்றதாகவும், இலங்கையில் வாடும் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை வழங்குவதற்குத் தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது என்று அதில் குறிப்பிட்டிருந்ததாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டி இருந்தார். மேலும் தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று, அத்தியாவசியப் பொருட்களையும், உயிர் காக்கும் மருந்துகளையும் உடனடியாக இலங்கைக்கு அனுப்பிட தேவையான ஏற்பாடுகளைச் செய்து, உரிய அனுமதிகளை மத்திய அரசு வழங்கிட வேண்டுமென்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீர்மானத்தின் விபரத்தையும் முதலமைச்சர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பதில் கடிதம் எழுதி இருக்கிறார். அதில், “இலங்கை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரக்கூடிய நடவடிக்கைகளுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு இலங்கை தமிழர்களுக்கு வழங்க முன் வந்த உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்படும் என்றும் கூறியுள்ளார். வெளியுறவுத்துறை அமைச்சரின் மூலமாக இந்த உதவிகள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ள ஜெய்சங்கர், தமிழ்நாடு தலைமை செயலாளர் வெளியுறவுத்துறையோடு இணைந்து செயல்படலாம் என்றும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.







