ஆவின் பணி நியமன விவகாரம் – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

விருதுநகர் ஆவினில் அரசாணையை மீறி முறைகேடாக பணியாளர்களை தேர்வு செய்த உயர் அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்று  உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. திருப்பூர், காஞ்சிபுரம்-திருவள்ளூர், மதுரை, தஞ்சாவூர், நாமக்கல், விருதுநகர்,…

விருதுநகர் ஆவினில் அரசாணையை மீறி முறைகேடாக பணியாளர்களை தேர்வு செய்த உயர் அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்று  உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

திருப்பூர், காஞ்சிபுரம்-திருவள்ளூர், மதுரை, தஞ்சாவூர், நாமக்கல், விருதுநகர், திருச்சி, தேனி பால் உற்பத்தியாளர் ஒன்றியங்கள் மற்றும் சென்னையில் உள்ள ஆவின் தலைமையகத்தில் கடந்த 2020-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை 236 பேர் நேரடியாகப் பணியில் அமர்த்தப்பட்டனர். இந்தப் பணியிடங்களில் தகுதியில்லாத பலரும் நியமனம் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.

இந்நிலையில், விருதுநகர் ஆவினில்  நேரடி பணி நியமனங்களில் விதிகள் முறையாக பின்பற்றாமல் பணி ஆணைகள் வழங்கப்பட்டதாகக் கூறி ஸ்ரீலட்சுமி, சுமதி உட்பட 41 நபர்கள் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு, நீதிபதி தண்டபானி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், தமிழ்நாடு அரசின் அரசாணையை மீறி விருதுநகர் ஆவினில் முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதி, விருதுநகர் ஆவினில் பணியாளர்களை தேர்வு செய்த உயர் அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து தமிழக அரசு தரப்பில் பதில் அளிக்க நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் இந்த வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.