சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த ஆரோன் பின்ச்

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் உள்ள கோலாக் என்ற பகுதியில் பிறந்தவர் ஆரோன் பின்ச் (36). இவர் 2011-ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு…

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் உள்ள கோலாக் என்ற பகுதியில் பிறந்தவர் ஆரோன் பின்ச் (36). இவர் 2011-ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான சர்வதேச போட்டிகளில் அறிமுகமானார். தொடர் அதிரடி தொடக்க ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணிக்கு பல வெற்றிகளைப் பெற்றுத் தந்துள்ளார். இதுவரை இவர் 103 சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 2018-ம் ஆண்டு ஜிம்பாவேக்கு எதிராக 76 பந்துகளில் 172 ரன்களை குவித்து, டி20 சர்வதேச அரங்கில் அதிக ரன்களை குவித்தவர் என்ற சாதனையைப் படைத்தார்.

இதைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பர் மாதம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக பின்ச் அறிவித்தார். பின்னர், டி20 போட்டிகளுக்கு மட்டும் கேப்டனாக செயல்பட்டு வந்தார். இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக பின்ச் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை வரை என்னால் விளையாட முடியும் என நான் நினைக்கவில்லை. எனவே, அணியின் நலனைக் கருத்தில் கொண்டு ஓய்வை அறிவிக்கிறேன். நான் ஓய்வை அறிவிப்பதற்கான சரியான நேரம் இதுதான். 12 ஆண்டுகளாக ஆஸ்திரேலியா அணிக்காக விளையாடியதை பெருமையாக கருதுகிறேன்.

டி20 உலகக் கோப்பை மற்றும் 2015இல் ஒருநாள் உலகக் கோப்பை வென்ற தருணத்தை என்னால் மறக்க முடியாது. என்னை தொடர்ந்து ஆதரித்த எனது ரசிகர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.