முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தமிழகம் செய்திகள்

கைகொடுக்குமா கமலின் காலப்பயணம்?- ”ஆளவந்தான்” மறுவெளியீடு பின்னணி என்ன?


எஸ்.இலட்சுமணன்

கட்டுரையாளர்

இந்திய சினிமாவின் டைம் டிராவலரான கமல்ஹாசன்,  திரையுலகில் எப்போதும் முன்னோக்கியே காலப் பயணம் செய்பவர். அப்படி அவர் காலப் பயணம் செய்து, 2023ல் கொடுக்க வேண்டிய ஒரு படத்தை 2001லேயே கொடுத்தார். இன்னும் சொல்லப்போனால் ஹாலிவுட்டைவிடவே 2 வருடத்திற்கு முன்னோக்கிச் சென்று கமல்ஹாசன் படைத்த அந்த கலைவிருந்துதான் ஆளவந்தான்.

சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதினை இருமுறை வென்றவரான பிரபல ஹாலிவுட் இயக்குனர் க்வென்டின் டிரான்டீனோவுக்கு புகழ் சேர்த்த படங்களில் கில் பில் முக்கியமானது. இரண்டு பாகங்களாக வெளிவந்த இந்த படத்தில் இடம் பெற்ற முக்கிய காட்சி ஒன்றுக்கு இன்ஸ்பிரேஷன் ஆளவந்தான்தான். ஆளவந்தானின் இந்தி பதிப்பான அபய் படத்தை பார்த்தபோதுதான் வன்முறைக்காட்சிகளை அனிமேஷன் வடிவில் கொடுக்கும் யோசனையே தனக்கு தோன்றியதாக க்வென்டின் டிரான்டீனோ ஒப்புக்கொண்டுள்ளார்.  ஹாலிவுட் படமான கில் பில் 2003ல் வெளிவந்த நிலையில் அதற்கு முன்மாதிரியாக அமைந்த ஆளவந்தான் படத்தை 2 வருடத்திற்கு முன்பாக 2001லேயே கொடுத்துவிட்டார் கமல்ஹாசன். ஆனால் க்வென்டின் டிரான்டீனோவுக்கு ஆளவந்தானில் எந்த விஷயம் பிடித்துப்போனதோ அந்த விஷயம்தான் அப்போது இந்திய சினிமா ரசிகர்களுக்கு பிடிக்காமல் போய் படத்தின் வெற்றிக்கு பெரும் தடையாக அமைந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஆளவந்தானில் நிஜகேரக்டர்களும் அனிமேஷன் கேரக்டர்களும் மாறி மாறி திரையில் தோன்றும் காட்சிகள் அப்போது ரசிகர்களுக்கு அந்நியமாய் தோன்றியது. படம் புரியவில்லை என்பது போன்ற தோற்றத்தை உருவாக்குவதில் அந்த காட்சிகள் முக்கிய பங்கு வகித்தன. மேலும் அந்த காட்சிகளின் நீளமும் ரசிகர்களுக்கு  எரிச்சலூட்டின. விளைவு ஆளவந்தான் மிகப்பெரிய தோல்விப் படமாக அமைந்தது. ”ஆளவந்தான் என்னை அழிக்கவந்தான்” என படத்தால் தனக்கு ஏற்பட்ட நஷ்டம் குறித்த வேதனையை பத்திரிக்கைகளில் பதிவு செய்தார் தயாரிப்பாளர் எஸ்.தாணு. அந்த படத்திற்காக 22 ஆண்டுகளுக்கு முன்பு செலவிடப்பட்ட தொகை இன்றைய மதிப்பிற்கு ரூ.400 கோடிக்கு சமம் என படத்தின் தயாரிப்பு நிறுவனமே கூறுகிறது. இப்படி இந்திய சினிமாவில் மிகப்பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாக்கப்பட்ட படம், தனக்கு பெருத்த ஏமாற்றத்தைக் கொடுத்துவிட்டதே என்கிற ஆதங்கத்தை அவர் வெளிப்படுத்தினாலும்,  இந்த படம் அடுத்து வரும் தலைமுறைக்கு நிச்சயம் பிடிக்கும், அப்போது ரீ ரிலீஸ் செய்து நான் இழந்த பணத்தை எடுப்பேன் என்கிற நம்பிக்கையை தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தார். தற்போது அந்த நேரம் வந்துவிட்டது. ஆம் மறுவெளியீட்டிற்கான அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுவிட்டார் தாணு.

ஒரு படத்தை விளம்பரப்படுத்துவதில் தயாரிப்பாளர்  தாணு காட்டும் வித்தியாசமும், பிரம்மாண்டமும், தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலம். அதனை நிரூபிக்கும் வகையில் ஆளவந்தான் ரீ ரிலீசுக்காக அதிரடி காட்டத் தொடங்கிவிட்டார். ”புதிய டிஜிட்டல் ஒலி அமைப்பில், கமலுடன் கமல் மோதும் ஆளவந்தான். விரைவில் 1000 திரையரங்குகளில் அகிலமெங்கும்” என்கிற வாசகங்ளோடு வெளியான அந்த விளம்பரங்களில், பிரதானமாக படத்தில் பணியாற்றிய வெளிநாட்டு கலைஞர்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

ஆளவந்தான் படம் படப்பிடிப்பில் இருந்த காலங்களை ரீவைண்ட் செய்து பார்க்கும்போது, ஸ்காட் இங்க்லிஸ், கிராண்ட் பேஜ், போன்ற ஆஸ்திரேலிய, அமெரிக்க தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பு குறித்து பரபரப்பாக செய்திகள் வெளியானது நினைவுக்கு வரும். குறிப்பாக ஸ்காட் இங்க்லிஸ் கையாண்ட் மோஷன் கண்ட்ரோல் காமிரா. ஹாலிவுட் படங்களிலேயே பயன்படுத்தப்பட்டு வந்த மோஷன் கண்ட்ரோல் காமிராவை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட முதல் இந்திய திரைப்படம் ஆளவந்தான்தான். இரட்டை வேட காட்சிகளை இன்னொரு பரிமாணத்தில், எந்த ஒட்டுவேளையும் தெரியாமல் மிகவும் இயல்பானதாக ஆளவந்தானில் படமாக்க முடிந்தது இந்த மோஷன் கண்ட்ரோல் காமிராவால்தான்.

1983ம் ஆண்டு இதயம் பேசுகிறது நாளிதழில் தாயம் என்கிற பெயரில் தாம் எழுதிய தொடர்கதையை திரைப்படமாக எடுக்க வேண்டும் என்ற எண்ணம் கமல்ஹாசனுக்கு அப்போதே ஏற்பட்டது. இது குறித்து தனது ஆசான் இயக்குனர் கே.பாலச்சந்தரிடமும் விவாதித்திருக்கிறார். ஆனால் அந்த காலகட்டத்திற்கு அந்த கதை பொருத்தமாக இருக்காது என அப்போது கைவிடப்பட்டது. பின்னர் புத்தாயிரம் ஆண்டில் புதுப்படத்தை உருவாக்க கமல்ஹாசனும், தாணுவும் கைகோர்த்தபோதுதான் ஆளவந்தான் உருவானது. இந்தியன் படம் வெளிவந்த சமயத்தில் ஒரு நிகழ்ச்சியில் தாணுவும், கமல்ஹாசனும் சந்தித்தபோது, ”இந்தியன் நீங்கள் தயாரித்திருக்க வேண்டிய படம், மிஸ் செய்துவிட்டீர்களே, நீங்கள் தயாரித்திருந்தால் இந்தியன் தாத்தா வேடத்தை மிகப்பெரிய அளவில் விளம்பரப்படுத்தியிருப்பிர்கள்” என்று தாணுவிடம் கமல்ஹாசன் கூற, அந்த சந்திப்பின்போதுதான்   ஆளவந்தான் படத்திற்கான விதை தூவப்பட்டது. கமலின் நடிப்பாற்றல் மீது தாணுவுக்கு இருந்த மரியாதையும், தாணுவின் விளம்பர யுக்தி மீது கமலுக்கு இருந்த வியப்பும் இருவரும் இணைய காரணமாக இருந்தது. முதலில், நளதமயந்தி, பம்மல் கே சம்பந்தம் படங்களின் கதைகள்தான் பரிசீலிக்கப்பட்ட நிலையில் பின்னர்தான் ஆளவந்தான் கதை பிக்சானது.

ஆளவந்தான் படத்திற்கு கமல்ஹாசனே திரைக்கதையை அமைத்திருந்தார். அவரை வைத்து ஏற்கனவே சத்யா, இந்திரன் சந்திரன் படங்களை இயக்கியிருந்த  சுரேஷ் கிருஷ்ணா மூன்றாவதாக கமலுடன் இணைந்து பணியாற்றிய படம்தான் ஆளவந்தான். சித்தியின் கொடுமையால் பாதிக்கப்பட்ட இரட்டையர்களில் ஒருவர் மன நோயாளியாக மாற பின்னர் அவர் வளர்ந்ததும், தனது சகோதரனுடன் நடத்தும் மோதல் எப்படி செல்கிறது என்பதுதான் படத்தின் கதைக் கரு. கமாண்டோ படை வீரர், மன நோயாளி என இரண்டு மாறுபட்ட கதாபாத்திரங்களில் கமல்ஹாசன் அசத்தியிருப்பார். குறிப்பாக ஆஜானபாகுவான உடல்வாகுவுடன் மன நோயாளி கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் காட்டியிருக்கும் நடிப்பும், உடல்மொழியும் இந்திய திரையுலகையே வியப்பில் ஆழ்த்தியது.   மணிஷா கொய்ராலா, ரவீணா டாண்டன், சரத்பாபு ஆகியோர் கமல்ஹாசனுடன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

படப்பிடிப்பு தொடங்கியதிலிருந்து அடுத்தடுத்து வெளியான தகவல்களும், அதில் தெரிந்த பிரம்மாண்டங்களும் ஆளவந்தான் குறித்த எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் எகிறவைத்தன. ஆனால் படத்தின் நீளமும், அன்றைய காலகட்ட ரசனையோடு ஒட்டாதது போல் தோன்றிய காட்சியமைப்புகளும்,  படத்தை புரிந்துகொள்வதில் சிரமத்தை ஏற்படுத்திய அனிமேஷன் காட்சிகளும், ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்து ஆளவந்தானை தோல்விப்படமாக்கின. ஆளவந்தானில் ரசிகர்களுக்கு எரிச்சலூட்டிய காட்சிகளுக்கு எல்லாம் கத்திரிபோட்டுவிட்டு விறுவிறுப்பாக தற்போது படத்தை மாற்றியிருப்பதாக கூறும் தாணு, ஆளவந்தான் தற்போது ராக்கெட் வேகத்தில் செல்லும் படமாக இருக்கும் என்கிறார். படத்தை மீண்டும் எடிட்செய்து புதுப்பொலிவு ஆக்கி பார்த்தபோது, ஒரு படத்தை இதைவிட சிறப்பாக யாராலும் எடுக்க முடியாது என கமல்ஹாசனை பாராட்ட தனக்கு தோன்றியதாகவும் அவர் கூறுகிறார். நிச்சயம் இந்தமுறை படம் வெற்றியடையும் என நம்பிக்கையோடு கூறும் தாணு உலகெங்கிலும் ஆயிரம் திரையரங்குகளில் படத்தை மறு ரிலீஸ் செய்வதற்கான பணிகளில் மும்முரமாகியுள்ளார்.

கடந்த 2003ம் ஆண்டு வெளிவந்த ரஜினியின் பாபா படம் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. புதுப்படங்களுக்கு வெளியிடுவதுபோல் அதிகாலை காட்சிகள் வெளியிடப்பட்டு அவை ஹவுஸ்புல் ஆகின. பாபா படம் தோல்வியடைந்தபோது  ரஜினிக்கு ஏற்பட்ட மன வேதனைக்கு இந்த மறுவெளியீடும், அதற்கு கிடைத்த வரவேற்பும் ஆறுதல் அளித்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில் பாபா படத்தை இயக்கிய சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் 22 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ஆளவந்தான் தற்போது மறுவெளியீட்டிற்காக காத்திருக்கிறது. கடந்த ஆண்டு வெளிவந்த விக்ரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியின் மூலம் திரையுலகில் அசத்தலான கம்பேக்கை கமல்ஹாசன் கொடுத்துள்ள நிலையில், அவரது ஆளவந்தான் திரைப்படத்தின் மறுவெளியீடும் அதிக எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியிருக்கிறது. இந்த முறை வெற்றியை குவிக்குமா?, 2கே கிட்ஸ் அந்த படத்தை கொண்டாடுவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

-எஸ்.இலட்சுமணன்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பயங்கரவாதிகள்- பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கிச்சூடு; 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

Jayasheeba

சபரிமலை பயணம் தானப்பா…. என் வழி துணையா வந்து சேருப்பா…..

NAMBIRAJAN

தொழிலதிபரை கரம் பிடித்தார் நடிகை ஹன்சிகா!

EZHILARASAN D