நாட்டின் 74-வது குடியரசு தின விழா நாடுமுழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அரசு துறைகளின் சாதனைகளை எடுத்துச்சொல்லும் வகையில் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடத்தப்பட்டது. இதில் தமிழ்நாடு வாழ்க என்ற வாசகத்துடன் வந்த செய்தித்துறை அலங்கார ஊர்தியில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பகிர்ந்த தமிழ்நாடு என்று வார்த்தைகளாலான கோலமும் இடம் பெற்றிருந்தது.
1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் நாள் இந்தியா ஆங்கிலேயர்களை வெளியேற்றி விடுதலை பெற்றது. இதனைத் தொடர்ந்து 1950 -ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி தான் நமது தேசத்துக்கான அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டு அது நடைமுறைக்கு வந்து இந்தியா முழுமையான குடியரசு நாடாக உருவெடுத்தது. இதனையே குடியரசு தின விழாவாக நாடு முழுவதும் கொண்டாடுகிறோம். அந்த வகையில் இன்றை தினம் நாட்டின் 74-வது குடியரசு தின விழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனையொட்டி தமிழ்நாட்டில் குடியரசு தின விழா ஒவ்வோரு ஆண்டும், சென்னை மெரினா கடற்கரை சாலையிலுள்ள காந்தி சிலை அருகில் நடைபெறுவது வழக்கம். தற்போது அந்தப் பகுதியில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால், குடியரசு தின விழா மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு வந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.ரன்.ரவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமை செயலாளர் இறையன்பு, முப்படை அதிகாரிகள், தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை மாநகர காவல் ஆணையர் உள்ளிட்டோர் வரவற்றனர்.
இதனை தொடர்ந்து மேடைக்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, ராணுவ படைப்பிரிவு, கடற்படை, ராணுவம், விமானப்படை, சி.ஐ.எஸ்.ப்., சி.ஆர்.பி.எப்., தமிழ்நாடு சிறப்பு காவல் பிரிவு, தமிழ்நாடு பேரிடர் நிவாரண படை, கடலோர பாதுகாப்பு குழு, ஊர்க்காவல் படை உள்பட படைப்பிரிவினரின் அணிவகுப்பை ஏற்றுக் கொண்டார்.
இதன் பின்னர் தேசிய கொடியை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.பிறகு இந்நிகழ்வில் அரசு துறைகளின் சாதனைகளை எடுத்துச்சொல்லும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறை, காவல்துறை, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், வனத்துறை உள்ளிட்டவற்றைச் சேர்ந்த 22 அலங்கார ஊர்திகள் அணிவகுப்பும் நடைபெற்றது.
இந்த அரசு துறையின் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் முதல் ஊர்தியாக செய்தி மக்கள் தொடர்பு துறை சார்ந்த இரண்டு வாகனங்கள் இடம்பெற்றன.
அதில் தமிழ்நாடு வாழ்க என்ற வாசகத்துடன் வந்த செய்தித்துறை அலங்கார ஊர்தியில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பகிர்ந்த தமிழ்நாடு என்று வார்த்தைகளாலான கோலமும் இடம் பெற்றிருந்தது.
இதனைத்தொடர்ந்து சுற்றுலாத்துறை, விளையாட்டுத்துறை, சுகாதாரத்துறை, பள்ளிக்கல்வித்துறை, காவல்துறை, கால்நடை மற்றும் மருத்துவ துறை,கைத்தறித்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அலங்கார ஊர்திகள் அரசு நலத்திட்டங்களை விவரிக்கும் வகையில் இடம்பெற்றன. இந்த 22 அலங்கார ஊர்திகள் வரிசையில் இளைஞர் நலன் & விளையாட்டுத்துறை ஊர்தி 4 – வதாக இடம்பெற்றிருந்தது.
அதேபோன்று, தமிழ்நாட்டின் பல்வேறு பாரம்பரியங்களை பறைசாற்றும் வகையில் பள்ளி மாணவ, மாணவிகளின் மயிலாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம், கைச்சிலம்பாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும், நாட்டுப்புற கலை நிகழச்சிகளும், ராஜஸ்தானின் கல்பேலியா நடனம், மகாராஷ்டிராவின் கோலி நடனம், அசாமின் பகுரும்பா நடனம், என கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் வெகு விமரிசையாக அரங்கேறியது.
இந்நிகழ்வுகளை ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் ஒன்றாக அமர்ந்து கண்டு ரசித்தனர். இவர்களோடு பொதுமக்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து, ஆர்வமுடன் பார்த்து மகிழ்ந்தனர்.
- பி.ஜேம்ஸ் லிசா