குஜராத்தில் இன்று நடக்கும் முதல் கட்ட தேர்தலில் வாக்காளர்கள் புதிய சாதனை படைக்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குஜராத்தில் 182 இடங்களை கொண்டுள்ள சட்ட சபைக்கு டிசம்பர் 1, 5ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது. பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொந்த மாநிலமான குஜராத்தில் பாஜக கடந்த 6 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சி செய்து வருகிறது.
இந்த தேர்தல் மூலம் கால் நூற்றாண்டாக அங்கு நடக்கிற தனது ஆட்சியைத் தொடர்வதற்கு பா.ஜ.க. மும்முரம் காட்டி வருகிறது. அதேபோல் குஜராத்தில் இழந்த ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் முழு முனைப்புடன் களம் இறங்கியுள்ளது. இவ்விரு கட்சிகளுக்கும் இடையே டெல்லி மற்றும் பஞ்சாபை ஆளும் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் களம் புகுந்து அங்கு மும்முனை போட்டி நிலவுகிறது.
https://twitter.com/narendramodi/status/1598133746200612867
முதல் கட்டமாக தெற்கு குஜராத், கட்ச்-சவுராஷ்டிரா பகுதிகளில் 19 மாவட்டங்களில் அமைந்துள்ள 89 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் இன்று நடக்கிறது. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இந்நிலையில், வாக்காளர்கள் அதிக அளவில் வாக்களித்து புதிய சாதனை படைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், குஜராத்தில் இன்று முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில், அதிக வாக்காளர்கள் இந்த தேர்தலில் பங்கேற்று புதிய சாதனை நிகழ்த்த வேண்டும். முதல் தடவையாக வாக்களிக்க உள்ள இளம் வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை செயல்படுத்த வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.







