இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்திற்கு அஞ்சலி செலுத்த வந்த இளைஞர், ரயில் மீது ஏறி கொடியினை அசைத்த போது மின் கம்பியில் கை பட்டு மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.
இம்மானுவேல் சேகரனின் 65-வது நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனால், ஏ.டி.ஜி.பி தாமரைக்கண்ணன் தலைமையில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பரமக்குடியில் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது.

இம்மானுவேல் சேகரனின் நினைவிடத்தில் அவரது மகள் பிரபா ராணி, உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதனைத்தொடர்ந்து சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன், தங்கம் தென்னரசு, பெரியகருப்பன் மற்றும் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து பல்வேறு கட்சி பிரமுகர்கள், சமுதாய தலைவர்கள் இம்மானுவேல் சேகரனுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தேவகோட்டை பனிப்புலான் வயல் கிராமத்தைச் சேர்ந்த முகேஷ் (20) நண்பர்களோடு இம்மானுவேல் சேகரனுக்கு அஞ்சலி செலுத்த வந்துள்ளார். அஞ்சலி செலுத்திய பிறகு ரயில் நிலையத்துக்கு சென்ற அவர்கள் திருச்சி-ராமேஸ்வரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் பரமக்குடி ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தபோது ரயில் என்ஜினில் ஏறிய முகேஷ் என்ற இளைஞர் தனது கையில் வைத்திருந்த கொடியினை தூக்கி அசைத்த போது மின் கம்பியில் கை பட்டு மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.
ஆபத்தான நிலையில் இருந்த இளைஞரை ரயில்வே போலீசார் மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின் 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இந்நிலையில் இம்மானுவேல் சேகரனுக்கு அஞ்சலி செலுத்த வந்த இளைஞர் திடீரென ரயில் மீது ஏறியதும், அவருக்கு மின்சாரம் தாக்கியதும் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது.







