குஜராத்தில் நடந்த நெகிழ்ச்சியான ரக்ஷா பந்தன்!

அனம்தாவுக்கு கை தானம் செய்த ரியாவின் சகோதரருக்கு ராக்கி கட்டி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

 

குஜராத்தில் நடந்த ஒரு சம்பவம், மனித நேயத்தின் உச்சத்தை உணர்த்தியுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மின்சாரம் தாக்கியதில் தனது வலது கையை இழந்த 16 வயதான அனம்தா அகமது, தற்போது புதிய கையைப் பெற்றுள்ளார்.மூளைச்சாவு அடைந்த ரியா என்ற பெண்ணின் தோள்பட்டையிலிருந்து கை தானமாகப் பெறப்பட்டு, அனம்தாவுக்குப் பொருத்தப்பட்டது.

இந்நிலையில், ரக்ஷா பந்தன் பண்டிகையை ஒட்டி, அனம்தாவுக்கு கை தானம் செய்த ரியாவின் சகோதரருக்கு ராக்கி கட்டி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். அந்தச் சகோதரன், “எனக்கு என் சகோதரி திரும்பி வந்துவிட்டாள்” என்று உணர்ச்சிவசப்பட்டுக் கூறினார்.

அனம்தாவுக்கு அளிக்கப்பட்ட இந்த அறுவை சிகிச்சை குஜராத்தின் மருத்துவ வரலாற்றில் ஒரு முக்கியமான மைல்கலாக கருதப்படுகிறது. தோள்பட்டையிலிருந்து முழுமையாக ஒரு கையை எடுத்து, மற்றொருவருக்குப் பொருத்தும் இந்த நுட்பமான அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து முடித்துள்ளனர் மருத்துவர்கள். இந்த அறுவை சிகிச்சையின் வெற்றி, உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தை மீண்டும் ஒருமுறை எடுத்துக்காட்டுகிறது.

சகோதரத்துவத்தையும், பாதுகாப்பையும் வலியுறுத்தும் ரக்ஷா பந்தன் பண்டிகையில், அனம்தாவின் இந்தச் செயல் பலரின் மனதைத் தொட்டுள்ளது. உடல் உறுப்பு தானம் என்பது ஒரு உயிரைக் காப்பாற்றுவது மட்டுமல்ல, ஒரு குடும்பத்தின் சந்தோஷத்தை மீட்டெடுக்கும் மகத்தான செயல் என்பதையும் இந்தச் சம்பவம் உணர்த்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.