சென்னையில் சமையல் எண்ணெய் பாக்கெட்டை ஏற்றி வந்த மினி லாரி கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. மூன்று மணி நேர போராட்டத்திற்கு பிறகு லாரியை போலீசார் அப்புறப்படுத்தினர்.
சென்னை வண்ணாரப்பேட்டை பழைய சிறைச்சாலை சாலையில் சங்கர் என்பவருக்கு சொந்தமான மினி லாரியில் பெரியபாளையம் குடோனிலிருந்து சமையல் எண்ணெய் 3 டன் ஏற்றி மயிலாப்பூருக்கு கொண்டு செல்லப்பட்டது. அந்த லாரி அரசு ஸ்டான்லி மருத்துவ கல்லுாரி மகளிர் விடுதி அருகே வந்த போது முன்னே சென்ற பேருந்தின் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் ஹாரூன் சாலை தடுப்பில் மோதி நிலை தடுமாறி கவிழ்ந்தது.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. புது வண்ணார்பேட்டை போக்குவரத்து ஆய்வாளர் கண்ணன் தலைமையில் போலீசார் மற்றும் போக்குவரத்து புலனாய்வு காவல் துறை ஆய்வாளர் ஆகியோர் குழுவினர் போராடி விபத்துக்குள்ளான லாரியை 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அப்புறப்படுத்தினர். பின் போக்குவரத்து சரி செய்து அந்த பகுதி சாலையில் மணலைக் கொட்டி போக்குவரத்தை சீர் செய்தனர்.
—அனகா காளமேகன்







