சென்னை விமான நிலையத்தின் புதிய பன்னாட்டு முனைய திறப்பு விழாவில் முதலமைச்சரும் பிரதமர் மோடி கைகுலுக்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டுக்கு, இரண்டு நாள் பயணமாக தனி விமான மூலம் சற்றுமுன் சென்னை வந்தார்.
சென்னை விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்,ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் எல்.முருகன், ஜோதிராதித்ய சிந்தியா, அஷ்வினி வைஷ்ணவ், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இதையடுத்து பழைய விமான நிலையத்தில் வரவேற்பை முடித்துக் கொண்டு கார் மூலமாக சென்னை விமான நிலையத்தில் ரூ.2400 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த பன்னாட்டு முனையத்திற்கு பிரதமர் மோடி வந்தார். அங்கு புதிய விமான நிலைய முனையம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த பிரதமர், புதிய முனையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இதன் பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , ஆளுநர் ரவி , விமானப் போக்குவத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் பிரதமர் நரேந்திர மோடியுடன் புதிய பன்னாட்டு முனையத்தை பார்வையிட்டனர்.
இதன் பின்னர் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் அடையாறு ஐஎன்எஸ் சென்று அங்கிருந்து சாலை மார்க்கமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சென்று சென்னை-கோவை இடையே முதன்முறையாக வந்தே பாரத் சேவையை துவக்கி வைக்கிறார்.
அதனை முடித்துக் கொண்டு அங்கிருந்து சாலை மார்கமாக விவேகானந்தர் இல்லம் சென்று நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அதன் பின்னர் மீண்டும் அடையார் ஐஎன்எஸ் சென்று ஹெலிகாப்டர் மூலம் பல்லாவரம் பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள செல்கிறார்.
பின்னர் பல்லாவரம் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு அங்கிருந்து சென்னை பழைய விமான நிலையம் சென்று தனி விமான மூலம் மைசூர் புறப்பட்டு செல்கிறார். நாளை அங்கிருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு புறப்பட்டு செல்கிறார்.







