தமிழர்கள், தமிழ்நாட்டோடு நெருக்கமான சிங்கப்பூர் நாட்டின் அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அந்நாட்டின் மூத்த அமைச்சரும் தமிழருமான தர்மன் சண்முகரத்னம் தெரிவித்துள்ளார். அவரது பின்னணி என்ன?, தேர்தலில் அவருக்கான வெற்றி வாய்ப்பு எப்படி ? என்பது குறித்து பார்க்கலாம்.
சிங்கப்பூர் மக்கள் தொகையில் 9 சதவீதத்திற்கு மேல் இந்தியர்கள் உள்ளனர். இதில். 80 சதவீதம் தமிழர்கள் என்கிறார்கள். அந்நாட்டின் தந்தை என்று அழைக்கப்படும் லீ க்குவான் யூ தமிழர்கள் மீது பெரும் மதிப்பு வைத்திருந்தார். பல முக்கிய பொறுப்புகளில் தமிழர்களையும் அமர்த்தினார். தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களில் உள்ள பலர் சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்றவர்கள், சென்றவர்களோடு தொடர்புடையவர்களாக இருப்பார்கள்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
லீ குவான் யூ பெருமையைப் போற்றும் வகையில் தமிழ்நாட்டில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று சிங்கப்பூர் சென்றிருந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் அறிவித்தார். திருவாரூ மாவட்டம் மன்னார்குடியில் மீ குவான் யூ சிலை மற்றும் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அந்நாட்டின் 6வது அதிபராக எஸ்.ஆர்.நாதன் என்கிற செல்லப்பன் ராமநாதன் 1999-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார், நாட்டின் வடிவமைத்த மிக முக்கிய தலைவர்களில் ஒருவராக எஸ்.ஆர்.நாதன் இருந்தார். மிக எளிய குடும்ப பின்னணியில் இருந்து அதிபர் பதவி வரை அவர் உயர்ந்தார்.
அதிபராக மீண்டும் ஒரு தமிழர்?
இந்நிலையில், சிங்கப்பூரின 8வது மற்றும் முதல் பெண் அதிபராக உள்ள ஹலிமா யாக்கூப்பின் பதவிக் காலம் வரும் செப்டம்பர் 13ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து அடுத்த அதிபர் தேர்தல் ஜூன் 13-லிருந்த்து செப்டம்பர் 13க்குள் நடத்தப்பட வேண்டும். ஆனால், இந்த தேர்தலில் போட்டியிடப் போவது இல்லை என்று ஹலிமா, கடந்த 29ம் தேதி அறிவித்து விட்டார். இதையடுத்து சிங்கப்பூரின் மூத்த அமைச்சராக உள்ள தர்மன் சண்முகரத்தினம் அதிபர் பதவிக்கு போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். இது சிங்கப்பூரில் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
அதிபர் தேர்தலில் போட்டியிடுவதையடுத்து, சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்-கிற்கு தர்மன் அனுப்பியுள்ள கடிதத்தில், ’’அதிபர் பதவிக்கு போட்டியிடுவதால், தனது அமைச்சர் பதவி மற்றும் பிஏபி என்கிற மக்கள் செயல் கட்சிப் பதவிகளில் இருந்து விலகுவதாக’’ தெரிவித்துள்ளார். அவரது பதவி விலகலை பிரதமரும் ஏற்றுக் கொண்டுள்ளார். ஆனாலும், ஜூலை 7ம் தேதி வரை அவர் பதவியில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார அறிஞர் தர்மன்
புலம் பெயர்ந்த, தமிழ்ப் பெற்றோரின் மகனான தர்மன் லண்டன் ஸ்கூல் ஆப் எக்கனாமிக்ஸ், கேம்ப்ரிஜ், ஹார்வார்ட் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர். ஜப்பான் நாட்டுப் பெண்ணை மணந்தவர். கடந்த 2001-ல் சிங்கப்பூரின் மக்கள் செயல் கட்சி மூலம் ஜூரோங் குழுத் தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்வானார். இதைத் தொடர்ந்து, 2003-ல் கல்வி அமைச்சர், 2007-ல் நிதி அமைச்சர், 2011-ல் துணை பிரதமர் என படிப்படியாக உயர்ந்தார். முன்னதாக, அரசு நாணய வாரியத் தலைவர், பொருளாதார ஆலோசகர், சிங்கப்பூர் – இந்திய மேம்பாட்டு சங்க அறங்காவல் குழு தலைவர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகளையும் வகித்துள்ளார்.
சிங்கப்பூர் மற்றும் பன்னாட்டு சமூகப் பொருளாதார வல்லுநராக அறியப்படும் தர்மன், அதிபர் தேர்தலில் போட்டியிடுவதை பலரும் பாராட்டி வரவேற்றுள்ளனர். முன்னதாக எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றிலும் அவருக்கு அமோக வரவேற்பு உள்ளதைப் பார்க்க முடிகிறது. அவ்ர் குறித்து, பிரதமர் லீ சியன் லூங், ’’சிங்கப்பூர் வளர்ச்சியில் 20 ஆண்டுகாலம் பல முக்கிய பொறுப்புகளை வகித்தவர். அடுத்த தலைமுறை அமைச்சர்களை உருவாக்க உதவியாக இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் உள்ள தொழிற்சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் அவரை வரவேற்று, ஆதரவளித்துள்ளனர்.
இது குறித்து தர்மன் சண்முகரத்னம் கூறுகையில், ’’அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு சிங்கப்பூர் மக்கள் தரும் பெரும் ஆதரவு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலில் போட்டியிடுவது எனகிற கடினமான முடிவை, கவனமாக எடுத்துள்ளேன்’’ என்ரு தெரிவித்துள்ளார். குறிப்பாக, கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தல் மலாய்ச் சமூக வேட்பாளர்களுக்கு மட்டும் என ஒதுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து ஹலிமா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். தற்போது அனைத்து சமூகத்தினரும் போட்டியிடலாம். ஆகையால், ஒருவருக்கு மேல் போட்டியிட தகுதி பெற்றால், தேர்தல் நடத்தப்படும். தேர்தலில் 21 வயதுடைய அனைவரும் வாக்களிக்கும் தகுதி பெற்றுள்ளனர்.
சிங்கப்பூர் மக்களின் பேரபிமானம் பெற்ற தமிழர் எஸ்.ஆர்.நாதன் போல் மீண்டும் ஒரு தமிழர் சிங்கப்பூர் அதிபராக போட்டியின்றி தேர்வு செய்யப்படுவாரா? போட்டியிட்டு வெல்வாரா…? அதிபராகி உலகளாவிய எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வாரா? செப்டம்பர் வரை காத்திருப்போம்….