கணினி நிறுவனத்தில் திடீர் தீ விபத்து; 2 பேர் பலி

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் கணினி உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.  சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள கிரீம்ஸ் சாலையில்…

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் கணினி உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள கிரீம்ஸ் சாலையில் அமைந்துள்ள Square network solutions எனும் தனியார் நிறுவனத்தில் நேற்று நள்ளிரவு 3 மணி அளவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இந்த பகுதியில் தீ பிடித்ததை அடுத்து, இரவு மாநகராட்சி பணியின் போது பணியில் இருந்த தூய்மை பணியாளர்கள் உதவியுடன் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கபட்டது.

மாவட்ட தீ அணைப்புத்துறை அலுவலர் சரவணன் தலைமையில் எழும்பூர், வேப்பேரி, கீழ்ப்பாக்கம், திருவல்லிக்கேணி ஆகிய நான்கு தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஒன்றரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். நேற்று இரவு அலுவலகத்திற்கு தரை விரிப்பு அதாவது புலோர் மேட் போட்டு முடித்துவிட்டு அறையிலேயே தூங்கிய போது இன்று அதிகாலை AC யில் கேஸ் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருவரும் உயிரிழந்ததாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில், கிரீம்ஸ் சாலையில் SQUARE NETWORK SOLUTIONS, எனும் நிறுவனம் 10 வருடங்களுக்கு மேலாக இயங்கி வருகிறது. கணினி உதிரி பாகங்கள்
மற்றும் இதர பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை செய்யும் இந்த நிறுவனத்தின்
குடோன் பகுதி மட்டுமே தீயில் எரிந்துள்ளதாகவும் அலுவலகம் மற்றும் மற்ற பொருட்களுக்கு எந்த சேதமும் இல்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த இருவரின் சடலங்களும் ஓமாந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக ஆயிரம் விளக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், இன்று காலை 9:30 மணியளவில் ஆயிரம் விளக்கு காவல்துறை மற்றும் தடயவியல் துறை நிபுணர்கள், விபத்து பகுதியை ஆய்வு மேற்கொண்டு விசாரணை செய்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.