இலங்கையில் கடந்த சில மாதங்களாக பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடைந்துள்ள
நிலையில் அந்நாட்டில் வாழ வழியில்லாமல் தமிழகத்துக்கு அகதிகளாக வரும் இலங்கை தேசத்தினரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இவர்களில் பெரும்பாலானவர்கள் இலங்கையில் உள்ள தமிழர்கள் ஆவர். இலங்கையில் இருந்து கடந்த 27ஆம் தேதியன்று இலங்கை மன்னார் பகுதியைச் சேர்ந்த பரமேஸ்வரி – பெரியண்ணன்(சிவன்) என்ற வயதான தம்பதியினர் அகதிகளாக தனுஷ்கோடி அருகே கடற்கரையில் மயங்கிய நிலையில் கிடந்தனர்.
இதனையடுத்து இருவரின் உடல்நலம் குறித்து பரிசோதித்தபோது உயிருக்கு ஆபத்தான
நிலையில் இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் கடந்த 27ஆம்தேதியே அனுமதிக்கப்பட்டு கடந்த ஒரு வாரமாக பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்ட நிலையில் இன்று காலை பரமேஸ்வரி (70) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனிடையே, பரமேஸ்வரியின் கணவன் பெரியண்ணன் தற்போது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தமிழகத்திற்கு அகதிகளாக வந்த வயதான தம்பதியரில் ஒருவரான பரமேஸ்வரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் நிலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால், மக்கள் மிகவும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.








