நடுவானில் திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறு – சென்னை வந்த பிரிட்டிஷ் போயிங் விமானம் லண்டனில் தரையிறக்கம்!!

சென்னைக்கு 360 பயணிகளுடன் வந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், நடு வானில் பறந்த போது திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக, லண்டனிலேயே அவசரமாக தரையிரக்கப்பட்டது.

சென்னை அண்ணா பன்னாட்டு விமான நிலையத்திற்கு லண்டனில் இருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனம், தினசரி விமான சேவைகளை இயக்கி வருகிறது. இந்த விமானத்தில் லண்டன் பயணிகள் மட்டுமின்றி, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, பிரான்ஸ், ஸ்வீடன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு செல்லும் பயணிகளும், பயணிப்பார்கள். எனவே இந்த விமானத்தில் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

லண்டனிலிருந்து புறப்படும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம் அதிகாலை 3.30 மணிக்கு சென்னை வந்து சேரும். அதன் பின்பு சென்னையில் இருந்து அதிகாலை 5.35 மணிக்கு லண்டனுக்கு புறப்பட்டு செல்லும். அதைப்போல் நேற்று லண்டனில் இருந்து 360 பயணிகளுடன் சென்னைக்கு புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், நடுவானில் பறக்கத் தொடங்கிய சிறிது நேரத்தில், இயந்திர கோளாறு ஏற்பட்டு, வானில் வட்டமடித்து பறந்து கொண்டு இருந்தது. அதன் பின்பு விமானம் உடனடியாக திரும்பிச் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில், அவசரமாக தரை இறங்கியது.

இதை அடுத்து இன்று அதிகாலை 3.30 மணிக்கு, சென்னைக்கு வர வேண்டிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானமும், சென்னையில் இருந்து லண்டனுக்கு இன்று அதிகாலை 5.35 மணிக்கு, புறப்பட்டு செல்ல வேண்டிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானமும், ரத்து என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து இன்று அதி காலை லண்டன் செல்ல இருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில், 366 பயணிகள் லண்டன் செல்ல இருந்தனர்.

நேற்று இரவே, தனித்தனியாக இணையதளம் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தகவல் கிடைக்காத பயணிகள், வெளியூர்களிலிருந்து சென்னை வந்து விமான நிலையத்திற்கு வந்துவிட்டனர். பின்னர் விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இதனால் சுமார் 700க்கும் மேற்பட்ட பயணிகள் லண்டன் மற்றும் சென்னையில் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இது குறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், அகமதாபாத் விமான விபத்துக்குப் பிறகு, உலகம் முழுவதும் உள்ள விமான நிலையங்களில், விமானங்கள் புறப்படுவதற்கு முன்னதாக, விமானங்களின் இயந்திரங்கள் தொடர்ச்சியாக இரண்டு அல்லது மூன்று முறை சரிபார்க்கப்படுகிறது. விமான இயந்திரங்களில் சிறிய அளவில் பாதிப்புகள் இருந்தாலும், அதை முழுமையாக சரி செய்த பின்பே, விமானங்கள் இயக்கப்படுகின்றன.

இதனால் தான் விமானங்கள் தாமதமாவது, இல்லையேல் ரத்து செய்யப்படுவது போன்றவைகள் நடக்கின்றன. பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி, இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால், பயணிகள் தங்களுக்கு ஏற்படும், இதைப் போன்ற பிரச்சனைகளை பொறுத்துக் கொள்ள வேண்டும். விமான நிறுவனங்களுக்கு பயணிகளின் உயிர் முக்கியம். என்று தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.