மனைவி தாக்கப்பட்டதாக ராணுவ வீரர் வீடியோ வெளியிட்ட விவகாரம்! கத்தி குத்து சிசிடிவி காட்சி வெளியீடு

மனைவி தாக்கப்பட்டதாக ராணுவ வீரர் வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் ராணுவ வீரர் பிரபாகரனின் மைத்துனர் ஜீவா என்பவர் இடத்தின் உரிமையாளர் ராமுவை கத்தியால் குத்தும் சிசிடிவி காட்சி மாவட்ட காவல்துறை சார்பில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.…

மனைவி தாக்கப்பட்டதாக ராணுவ வீரர் வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் ராணுவ வீரர் பிரபாகரனின் மைத்துனர் ஜீவா என்பவர் இடத்தின் உரிமையாளர் ராமுவை கத்தியால் குத்தும் சிசிடிவி காட்சி மாவட்ட காவல்துறை சார்பில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

பிரபாகரன் என்ற ராணுவ வீரர் திருவண்ணாமலை மாவட்டம், படவேடு கிராமத்தில் கீர்த்தி என்ற தனது மனைவியை கடை காலி செய்வதில் உள்ள பிரச்சனை காரணமாக சிலர் அடித்து மானபங்கம் செய்ததாகவும் அவரை காப்பாற்றுமாறும் வீடியோ வெளியிட்டார். இது சர்ச்சையான நிலையில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் திருவண்ணாமலை மாவட்டம், படவேடு கிராமம் ரேணுகாம்பாள் கோவில் அருகே ரேணுகாம்பாள் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் குன்னத்துர் கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவர் கட்டிடம் கட்டி படவேடு கிராமத்தைச் சார்ந்த செல்வமூர்த்தி என்பவருக்கு சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.9.50 லட்சம் பெற்றுக்கொண்டு மாதம் ரூ.3000க்கு வாடகைக்கு விட்டுள்ளார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு குமார் இறந்துவிடவே அவரது மகனான ராமு என்பவர் கடையை தங்களிடம் திரும்ப ஒப்படைக்கக் கோரி செல்வமூர்த்தியிடம் ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். இதில் செல்வமூர்த்திக்கு ரூ.9.50 லட்சம் ராமு கொடுத்து விடுவது என்றும், அதைப் பெற்றுக்கொண்டு 10.02.2023-ந் தேதியன்று செல்வமூர்த்தி கடையை காலி செய்வதென்றும் இருவருக்கும் எழுத்து மூலமாக உடன்பாடு எட்டப்பட்டிருக்கிறது.

அதன்பின்னர், செல்வமூர்த்தி ஒப்பந்தப்படி பணத்தையும் பெற்றுக் கொள்ளாமலும், கடையையும் காலி செய்யாமலும் இருந்து வந்துள்ளார். ராமு பலமுறை முயற்சித்தும் பலனளிக்காமல் போகவே ராமும் அவரது குடும்பத்தினரும் மேற்படி கடைக்கு சென்று செல்வமூர்த்தியின் மகன்கள் ஜீவா மற்றும் உதயா ஆகியோரிடம் பணத்தை கொடுத்து கடையை காலி செய்யக் கூறியபோது செல்வமூர்த்தியின் மகன் ஜீவா என்பவர் கத்தியால் ராமுவின் தலையில் தாக்கியுள்ளார்.

அப்போது ராணுவ வீரர் பிரபாகரனின் மனைவியும் மேற்படி செல்வமூர்த்தியின் மகளுமான கீர்த்தி மற்றும் அவரது தாயாரும் இருந்துள்ளனர். ராமுவிற்கு ஏற்பட்ட இந்த காயத்தை பார்த்த அக்கம்பக்கத்திலிருந்த பொதுமக்கள், ராமுவிற்கு ஆதரவாக ஓடிவந்து ஒப்பந்தப்படி கடையையும் காலி செய்ய மறுத்துள்ளீர்கள், கடையின் உரிமையாளரையும் தாக்குகிறீர்கள் என்று ஆவேசப்பட்டு கடையிலிருந்த பொருட்களை எடுத்து வெளியே போட்டுள்ளார்கள்.

மேலும் பொதுமக்கள் ஆவேசப்பட்டு பொருட்களை எடுத்து வீசியுள்ளார்களே தவிர கீர்த்தியையோ அவரது தாயாரையோ யாரும் மானபங்கம் செய்யவில்லை என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவருகிறது. மேலும் இந்த விஷயம் முற்றிலும் மிகைப்படுத்தி கூறியுள்ள தகவல் என தெரியவருகிறது. இருப்பினும், இருதரப்பிலும் கொடுத்துள்ள புகாரின் அடிப்படையில் சந்தவாசல் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் ராணுவ வீரர் பிரபாகரனின் மைத்துனர் ஜீவா என்பவர் இடத்தின் உரிமையாளர் ராமுவை கத்தியால் குத்தும் சிசிடிவி காட்சி மாவட்ட காவல்துறை சார்பில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அதோடு எதிர் தரப்பினர் மீது தாக்குதல் நடத்தியதாக கீர்த்தி மற்றும் அவருடைய சகோதரர்கள் மீதும் சந்தவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருவண்ணாமலை மாவட்டம் படவேடு கிராமத்தில் ராணுவ வீரர் மனைவியை தாக்கிய விவகாரத்தில் ஹரிஹரன் என்கிற ஹரி பிரசாத் செல்வராஜ் ஆகியோரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.