கடம்பூர் மலைப்பகுதியில் ஒரு வாரமாக மக்களை அச்சுறுத்தி வரும் ஒற்றை காட்டு யானை!

சத்தியமங்கலம் அருகே கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து கடந்த ஒரு வாரமாக மாலை நேரங்களில் பயிர்களை சேதப்படுத்தும் ஒற்றை காட்டு யானையால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள்…

சத்தியமங்கலம் அருகே கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து கடந்த ஒரு வாரமாக மாலை நேரங்களில் பயிர்களை சேதப்படுத்தும் ஒற்றை காட்டு யானையால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பதில் யானை, புலி, சிறுத்தை புலி, கரடி என ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. குறிப்பாக யானைகள் உணவுக்காகவும், தண்ணீருக்காவும் வனத்தை விட்டு வெளியேறி விவசாய நிலங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துவதும் மனிதர்களை தாக்கிக் கொல்லுவதும் தொடர்கதையாக உள்ளது.

இந்த நிலையில் கடம்பூர் மலை கிராத்தின் சுற்றுவட்டார பகுதியில் கடந்த ஒருவாரமாக மாலை நேரத்தில் ஒற்றை காட்டு யானை ஒன்று விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. நேற்று மாலை 5 மணி அளவில் செங்காடு கிராமத்தைச் சேர்ந்த மாதேவன் என்பவரின் விவசாய தோட்ட பகுதிக்குள் புகுந்து காட்டு யானை அங்கு அமைக்கப்பட்டிருந்த தகர செட் குடியிருப்புகளை சேதப்படுத்தியது. மாலை நேரம் என்பதால் அங்கு யாரும் தங்கவில்லை இதனால் உயிர் சேதம் ஏற்படவில்லை. அந்த ஒற்றை யானையை விரட்டினால், அது மனிதர்களை நோக்கி தாக்க ஓடி வருவதால் கிராம மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.

இதனை அடுத்து அப்பகுதி மக்கள் தொடர்ந்து கடம்பூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தும் அவர்கள் காட்டு யானையை வனத்திற்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபடாமல் அலட்சியப்படுத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதி கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து அந்த ஒற்றை யானையை தினந்தோறும் வனத்திற்குள் விரட்டியடித்து வருவது தொடர்கதையாக உள்ளது.

யானை, மனித மோதல் ஏற்படும் முன் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.