கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதையடுத்து, அந்த கட்சியினர் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோட்டில், சட்டமன்ற உறுப்பினரும் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் இல்லம் முன் கூடிய தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அவ்வழியாக சென்ற பொதுமக்களுக்கு அவர்கள் இனிப்பு வழங்கி கர்நாடக வெற்றியை கொண்டாடினர். 
ராமநாதபுரத்தில் காங்கிரஸ் நகர தலைவர் கோபி தலைமையில், ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் பேரணியாக வந்து மேளதாளத்துடன் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி, பட்டாசுகள் வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு மாமன்ற உறுப்பினர் ஸ்டீபன் பாபு தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து டிரம்ஸ் வாத்தியங்கள் முழங்க ஆட்டம், பாட்டம் என பட்டாசு வெடித்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு
வழங்கி உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதே போல் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியின் கர்நாடக வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர்.








