நீலகிரியில் குடியிருப்பின் அருகே உலா வந்த ஒற்றை யானையால் பரபரப்பு ஏற்பட்டது. பெரும் அசம்பாவிதங்கள் நடைபெறும் முன் யானையை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட நடவடிக்கை எடுக்க வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகள், தேயிலை தோட்டங்கள் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளன. இந்த வனப்பகுதியில் யானைகளில் நடமாட்டம் அதிக அளவில் காணப்படும் நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள் குடியிருப்புகள், தேயிலை தோட்டங்கள் மற்றும் விளை நிலங்களின் அருகே உலா வருவது வழக்கம். அதுமட்டுமல்லாமல் மனிதர்களை தாக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் கூடலூர் அருகே உள்ள தேவர் சோலை நான்காவது மயில் பகுதியில் இன்று அதிகாலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை மிகுந்த ஆக்ரோஷத்துடன் குடியிருப்பின் அருகே உலா வந்தது. பின்னர் குடியிருப்பு பகுதியில் நீண்ட தூரம் நடந்து சென்று அருகே உள்ள தேயிலை தோட்டம் வழியாக மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.
அதிகாலை நேரம் என்பதாலும் குடியிருப்பு வாசிகள் யாரும் வெளியே செல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. குடியிருப்பு பகுதியில் உலா வரும் யானையால் ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும் முன் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து அடர்ந்த வனப் பகுதிக்கு விரட்ட வேண்டும் என வனத்துறையினருக்கு குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




