கேரளாவின் முன்னாள் முதலமைச்சரின் மகன் சாண்டி உம்மன் இடைத்தேர்தலுக்காக மனுதாக்கல் செய்தபோது, ரூ.12 லட்சம் கடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டது, அம்மாநில மக்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஜூலை 18ம் தேதி காலமானாா். இவர் புதுப்பள்ளி தொகுதியில் 1970 முதல் 53 ஆண்டுகள் எம்எல்ஏவாகவும், இருமுறை கேரள முதலமைச்சராகவும் பதவி வகித்துள்ளாா். எனவே, அவரது மறைவை அடுத்து அத்தொகுதியில் நடத்தப்படும் இடைத் தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் யாா் போட்டியிடுவாா் என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சிக் கூட்டத்துக்குப் பிறகு, புதுப்பள்ளி தொகுதி இடைத்தேர்லில் உம்மன் சாண்டியின் மகன் சாண்டி உம்மன்(37) போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. வரும் செப்டம்பர் 5-ம் தேதி நடைபெறும் இடைத்தேர்தலுக்காக சாண்டி உம்மன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இதில் அவர் சொத்து மதிப்பு குறித்த விவரங்களில், 8 வங்கிக் கணக்குகள் மற்றும் கையிருப்பு ரூ.15,000 சேர்த்து தன்னிடம் மொத்தமாக ரூ.15,98,600 இருப்பதாகவும் நிலம், வீடு போன்ற அசையா சொத்துக்கள் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், வங்கி மற்றும் கூட்டறவு வங்கிகளில் ரூ.12 லட்சம் கடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
10 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்த உம்மன் சாண்டியின் மகன் கடனாளியாக இருப்பது அம்மாநில மக்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உம்மன் சாண்டிக்கு ஒரு மகன், இரு மகள்கள் உள்ளனா். தனது குடும்பத்தில் இருந்து எவரும் தீவிர அரசியலில் ஈடுபடுவதை உம்மன் சாண்டி விரும்பியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




