நாகப்பட்டினத்தில் அரியவகை ஆலிவ் ரெட்லி ஆமை குஞ்சுகள் மீண்டும் கடலில் விடப்பட்டன.
நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் கோடியக்கரை முதல் கொள்ளிடம் வரை 182 கிலோ மீட்டர் துாரம் உள்ள கடற்கரை பகுதிக்கு வரும் ஆமை இனங்கள் அங்குள்ள மணல் குன்றுகளில் முட்டையிட்டு செல்கின்றன. இந்நிலையில் முட்டைகளை சேகரித்து வரும் மாவட்ட வனச்சரக அலுவலர்கள் சீர்காழி, நாகை, கோடியக்கரை உள்ளிட்ட எட்டு இடங்களில் குஞ்சு பொரிப்பகம் அமைத்து முட்டைகளை 45 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை அடைகாத்து குஞ்சு பொரித்த பின் கடலில் விடுகின்றனர்.
கடந்த பிப்ரவரி மாதம் நாகை, சாமந்தான்பேட்டை, நாகூர் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் இருந்து சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முட்டைகள் சேகரித்து சாமந்தான்பேட்டை செயற்கை குஞ்சு பொரிப்பகத்திலிருந்து 200 ஆலிவ் ரெட்லி ஆமை குஞ்சுகள் பொரித்தன.
இதனை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், வன உயிரின காப்பாளர் யோகேஷ் குமார் மீனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உள்ளிட்ட அதிகாரிகள் கடலில் விட்டனர். குஞ்சுகள் தாய்வீடு திரும்பும் உற்சாத்துடன் கடலில் நீந்தி சென்றன.
—அனகா காளமேகன்







