மயிலாடுதுறை அருகே ரவுடி தனது வீட்டின் பின்புறம் நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது விபத்து ஏற்பட்டு அவரது 2 கைகள் துண்டானது.
மயிலாடுதுறை மாவட்டம், பண்டாரவாடை கலைஞர் நகரை சேர்ந்தவர் கலைவாணன் (40). இவர்மீது கொலை, கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்குகள் என 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. மே14ம் தேதி இரவு அவரது வீட்டின் பின்புறம் நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக நாட்டுவெடிகுண்டு வெடித்தில் கலைவாணின் இரண்டு கைகளும் பாதியாக துண்டானது.
மேலும் மார்பு, தொடைகளிலும் பலத்த காயம் ஏற்பட்டது. அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பின் தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து விசாரணை மேற்கொண்ட பெரம்பலுார் போலீசார் திருவாரூரிலிருந்து முகில் என்ற மோப்ப நாயும், நாகப்பட்டினத்திலிருந்து அகிலா என்ற மோப்ப நாயும் வரவழைத்து சோதனை நடத்தினர்.
பின்னர் மயிலாடுதுறை மாவட்ட காவல்கண்காணிப்பாளர் நிஷா நேரில் விசாரணை நடத்தினார். மேலும் வெடிக்காத ஆறு, சணல் வெடி குண்டுகள், வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படும் நுாற்றுக்கணக்கான மூல வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதனால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-அனகா காளமேகன்






