அமெரிக்காவின் அலாஸ்கா தீபகற்ப பகுதியில் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அலாஸ்கா தீபகற்ப பகுதியில் உள்ள சாண்ட் பாயிண்டிலிருந்து தென்மேற்கே 55 மைல் தொலைவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி இரவு 10.48 மணியளவில் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.4ஆக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி உருவாக வாய்ப்பு உள்ளது என்று அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாக “கடலோரப் பகுதியில் இருக்கும் மக்கள், கடற்கரை மற்றும் துறைமுகப் பகுதிகளை விட்டு வெளியேற தேசிய சுனாமி எச்சரிக்கை மையத்தின் அதிகாரிகள் கூறியுள்ளனர். “சிக்னிக் விரிகுடாவில் இருந்து யூனிமாக் கணவாய் வரை” சுனாமி அலைகள் கரையைத் தாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட 90 நிமிடங்களுக்கு முன் இந்த சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கமானது, கடலுக்கடியில் 9.3 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுனாமி எச்சரிக்கையைத் தொடர்ந்து அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
- பி.ஜேம்ஸ் லிசா







