குளிர்சாதனப் பெட்டியை விட, மண்பானையே சிறந்தது என தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா மண் பானையை, குளிசாதன பெட்டியுடன் ஒப்பிட்டு பதிவிட்டுள்ள நிகழ்வு பலரது மத்தியிலும் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.
இந்தியாவின் மிகப் பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான ஆனந்த் மஹிந்திரா ட்விட்டர் பயன்பாட்டில் எப்போதுமே ஆக்டிவாக இருக்க கூடிய நபர். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கிட்டத்தட்ட 1 கோடியே 4 லட்சம் Followers-களை வைத்துள்ளதோடு, அவ்வப்போது நகைச்சுவையான மற்றும் புதிரான விஷயங்களை அதில் பகிர்ந்து கொள்வதை வழக்கமாகவும் வைத்திருப்பவர். இது தவிர, அவர் பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களையும், படைப்பாற்றல் மற்றும் புதுமைகளுக்காக மக்களை பாராட்டுவதையும் அவரது பல ட்வீட்களில் நம்மால் காணமுடியும்.
அந்த வகையில் நாம் மறந்துபோன மண்ணின் மகத்துவதத்துவத்தை, நம் முன்னோர் நமக்கு கற்றுக்கொடுத்த வாழ்வியல், தொழில் முறைகளை நினைவுபடுத்தும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் மண்பானையின் மகத்துவம் குறித்து பதிவிட்டுள்ளார்.
குறிப்பாக மண்பானையில் குடிநீரை ஊற்றி வைத்து 2 முதல் 5 மணி நேரம் வைத்திருந்தால், அந்த தண்ணீரில் உள்ள மாசுப்பொருட்கள் பலவற்றையும் மண் பானை உறிஞ்சி விடும். மண் பானையே இயற்கையின் மிகச் சிறந்த வாட்டர் பில்டர். அப்படிப்பட்ட அந்த வாட்டர் பில்டரை மக்கள் பயன்படுத்துவதை விட, வாட்டர் பாட்டில்களில் தண்ணீரை அடைத்து அதனை குளிர்சாதன பெட்டிகளில் போட்டு வைத்திருந்து எடுத்து குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
அப்படி தண்ணீரை குடிப்பதை விட இந்த முறை சிறந்தது என்பதை தெளிவுபடுத்தும் விதமாகவே இந்த பதிவை தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பதிவிட்டுள்ளார். அதில் இந்தியாவில் கோடை காலத்தைப் பார்க்கும்போது, குளிர்சாதனப் பெட்டிகளில் வைத்து குடிக்கும் நீரை விட, மண் பானையில் நீரை வைத்து குடிப்பது சிறந்ததாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
https://twitter.com/anandmahindra/status/1655898324992671744?s=20
மேலும் “உண்மையைச் சொல்வதென்றால், வடிவமைப்பு மற்றும் அழகியல் அடிப்படையில் மண்பானை உயர்ந்தது. வேகமாக நகரும் இந்த உலகில், மலிவான விலையில் விற்கப்படும் இந்த மண்பானை நம்முடன் பயணிக்க கூடிய ஒன்று. அப்படிப்பட்ட இந்த மண்பானையை பயன்படுத்துவது சிறந்ததாக இருக்கும். குளிர்சாதனப்பெட்டியுடன் ஒப்பிடுகையில், மண்பானை மலிவானது, நீடித்தது மற்றும் நீண்ட நாள் எடுத்துச் செல்லக்கூடியது என்று புகைப்படத்துடன் ஒப்பிட்டு பதிவிட்டிருந்தார்.
இதற்கிடையே, ப்ரிட்ஜின் விலை ரூ.10,000 க்கு மேல் உளது. ஏழு முதல் 15 ஆண்டுகள் மட்டுமே அவை நீடிக்கும். அதற்கு அதிக பராமரிப்பு, மின்சாரம் எல்லாம் தேவைப்படுகிறது என்று கூறியிருந்தார். மேலும் பாடகர் அரிஜித் சிங் கூட மண்பானை பற்றி ஒரு பாடலைப் பாடியுள்ளார் எனவும் தெரிவித்திருந்தார். தற்போது இந்த பதிவு இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மஹிந்திராவின் இந்த பதிவிற்கு பயனர்கள் கருத்து தெரிவிக்கையில், குடம் தண்ணீரை சேமிப்பதற்காக மட்டுமே. ஆனால் குளிர்சாதனப் பெட்டிகள் பல செயல்பாடுகளைக் கொண்டுள்ளன. மண்பானை தண்ணீரின் சுவையை அதிகரிக்கிறது மற்றும் கோடையில் குளிர்ச்சியாக இருக்கும். ஆனால் இரண்டையும் ஒப்பிட முடியாது என்று ஒரு பயனர் கூறியிருந்தார். மற்றொருவர், “உங்களால் இதுபோன்ற விஷயங்களைச் சொல்ல முடியும் என்று நம்புவது கடினம்” என்று கருத்து தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த ஆனந்த் மஹிந்திரா, “இது தெளிவாக ஒரு இலகுவான ஒப்பீடு, எனவே பயப்பட வேண்டாம், வலிமைமிக்க குளிர்சாதனப்பெட்டி அழிந்துபோகும் அபாயத்தில் இல்லை என தெரிவித்திருந்தார். ஆனந்த் மஹிந்திராவின் இந்த பதிவை மற்றொரு பயனர் ஏற்றுக் கொண்டார். அதில் ‘கடந்த 16 ஆண்டுகளாக இது பயன்படுத்தப்படுகிறது. இயற்கையாகவே குளிர்ந்த நீரை நமக்கு கொடுக்கிறது. அதனால் தண்ணீரின் சுவை கூடுகிறது. மண்பானை நீரை குடிப்பதால் இருமல் சளி அல்லது பிற ஒவ்வாமை இல்லை என்று கூறியிருந்தார்.
அதே போ ல், மற்றொரு பயனர் தனது வீட்டில் மண்பானை பயன்பாட்டில் இருந்தது. ஆனால் தற்போது எங்களிடம் இல்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். நான் உடனடியாக ஒன்றை ஆர்டர் செய்யப் போகிறேன். அமெரிக்காவில் உள்ள என் குழந்தைகளுக்கும் அனுப்பி வைக்கிறேன் என்று கூறியுள்ளார். தற்போது தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவின் இந்த மண்பானை பதிவு, சமூக வலைதளங்களில் அதிகமாக வைரலாகி வருவதோடு, பேசு பொருளாகவும் மாறியுள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா








