முக்கியச் செய்திகள் தமிழகம்

ஒற்றை செங்கல்லை காட்டி ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் ஈர்த்த அரசியல் ஆட்டக்காரர் “உதயநிதி ஸ்டாலின்”

குப்பை மேடுகள், கழிவு நீர் தேங்கிக் கிடக்கும் வீட்டு வாசல், சேறும் சகதியுமாகிக் கிடக்கும் சாலைகளென்று அழுக்கடைந்த பகுதியாகக் காட்சியளித்தது சேப்பாக்கம் தொகுதி. கடந்த பத்து வருடங்களாகச் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் என்று யாரும் அந்தப் பகுதியில் நுழைந்ததில்லை. சுகாதாரமற்று கிடக்கும் இந்த இடத்திற்கு விடிவு கிடைக்காதா என அந்த தொகுதி மக்கள் ஏக்கத்தோடு சாலையைப் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் தான், 2021 மே11-ல் அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றார் உதயநிதி ஸ்டாலின்.

யாருமே எதிர்பார்த்திருக்காத நேரத்தில், சகதி நிறைந்த சாலையில் இறங்கி நடக்கத் தொடங்கினார் உதயநிதி. அன்று மக்களோடு மக்களாய் நின்ற உதயநிதியை அங்கிருந்தவர்கள் அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். வெள்ளைச் சட்டையும், ஜின்ஸ் பேண்ட்டும், ஹவாய் செருப்புமாக ஒரு சாதாரண இளைஞனாக உதயநிதி சந்து பொந்துகளில் நடந்து, அம்மக்களின் பிரச்னைகளை நேரடியாகவே ஆய்வுசெய்கிறார் என்றால் யாருக்குத்தான் ஆச்சர்யமாக இருக்காது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தன் கண்ணில் பட்ட சுகாதார பிரச்சனைகளையெல்லாம் உடனடியாக சரிசெய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறார். ஒவ்வொரு வீடாக சென்று பார்வையிடுகிறார். அந்த பகுதி மக்களே செல்ல முடியாத நிலையிலிருந்த பொதுக் கழிப்பிடத்திற்குள்ளேயும் நுழைந்தவர், அடுத்த சில நிமிட நேரத்திற்குள் அதன் தலையெழுத்தையே மாற்றுகிறார். மருத்துவமனைக்குள் சுத்தமான குடிநீர் வழங்கப்படுகிறதா என ஆய்வு நடத்துகிறார். குடிசை வீடுகளில் வசிப்பவர்களின் நிலை என்ன என்று கேட்டு அறிகிறார். இவை அத்தனையும் அதிகாரம் கைக்கு வந்த ஒரே வாரத்தில் சேப்பாக்கம் தொகுதியையே தலைகீழாக மாற்றியிருந்தது.

இப்படி சுற்றிச் சுழன்று புயலாக இயங்கிக் கொண்டிருக்கும் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி, திமுகவின் எதிர்கால நம்பிக்கையாக பார்க்கப்படுகிறார். அதேநேரத்தில் திட்டமிட்டு முன்னிலைப் படுத்தப்படுகிறார் என்ற விமர்சனமும் எழாமல் இல்லை. இத்தகைய விமர்சனங்களுக்கு மத்தியில் தான் உதயநிதியின் அரசியல் வருகையைச் சற்று பின்னோக்கி பார்க்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா என்று பத்திரிக்கையாளர்கள் கேட்ட போதெல்லாம், நான் அரசியலுக்கு வரமாட்டேன் என்று சொல்லி வந்த உதயநிதி, சட்டமன்றத்தில் விவாதம் நடத்தும் அளவுக்கு காட்சிகள் மாறியது, காலத்தின் கட்டாயமாகிப் போனது.

உதயநிதி தமிழக மக்களுக்கு அறிமுகமானது ஒரு படத் தயாரிப்பாளராகத்தான். 2006 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி பொறுப்பை ஏற்றிருந்தது. இந்த காலகட்டத்தில் தான் ரெட் ஜெயன்ட் மூவிஸ் என்னும் படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியிருந்தார் உதயநிதி. 2008ம் ஆண்டு தரணி இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடிப்பில் குருவி படத்தை தயாரித்தது இந்நிறுவனம். ஆதவன், மன்மதன் அம்பு என படத்தயாரிப்பில் ஈடுபட்டுக்கொண்டே, திரைப்பட விநியோகம் என்ற முயற்சியிலும் ஈடுபட்டார் உதயநிதி. 2010ம் ஆண்டு மட்டும் 4 படங்கள் ரெட்ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் தான், 2011 ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பை ஏற்றார் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா.

அப்போது, ரெட் ஜெயண்ட் மூவிஸ்க்கு குடைச்சல் அதிகமானதாக கூறப்பட்டது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்த “ஏழாம் அறிவு” படத்துக்கு வரி விலக்களிக்க வெகு காலம் ஆனதாக அறிக்கை வெளியிட்டார் உதயநிதி. அதே நேரத்தில், அவர் நடிப்பில் வெளிவந்த “ஒரு கல் ஒரு கண்ணாடி” படத்திற்குக் கேளிக்கை வரிவிலக்கு கேட்டபோது, வரிவிலக்கு அளிக்க முடியாது என்று தணிக்கை துறை கூறியதாக தகவல் வெளியானது. நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து நீதியைப் பெற்றதாக உதயநிதி கூறியிருந்தார். அதிமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட அழுத்தம் என்பது, உதயநிதி என்ற தயாரிப்பாளருக்கு மட்டுமானதல்ல. ஸ்டாலின் மகன் என்ற காரணத்திலும்தான். இந்த சம்பவத்தின் மூலம், உதயநிதி அரசியல் பிரவேசம் செய்ய அதிமுக அரசுதான் பிள்ளையார் சுழி போட்டதென்று கூறலாம்.

இடைப்பட்ட எட்டாண்டு காலத்தில் உதயநிதி, படங்கள் தயாரிப்பது, விநியோகம் செய்வது, படங்களில் நடிப்பதென்று தொழிலில் வித்தகராக வலம் வந்தார்.
“ஒரு கல் ஒரு கண்ணாடி, நிமிர், இது கதிர்வேலன் காதல், சைக்கோ” போன்ற படங்கள் அவருக்கு மக்களிடம் நல்ல அறிமுகத்தை கொடுத்தன. முன்னாள் முதலமைச்சர்களான எம்ஜிஆருக்கும், ஜெயலலிதாவிற்கும், முதலமைச்சர் ஆவதற்கான அடித்தளத்தை ஏற்படுத்தி கொடுத்தது சினிமாதான். ஒரு வகையில் அண்ணா, கருணாநிதி, முரசொலி மாறன் போன்றவர்களுக்கும், திரையுலக தொடர்பு, ஆகச்சிறந்த பலமாக இருந்தது. அதுவே உதயநிதி விவகாரத்திலும் எதிரொலித்தது. சினிமா மூலம் மக்களிடம் அறிமுகமாகி, அரசியலில் காலிறங்கியது விமர்சிக்கப்பட்டாலும், இந்த ரூட் உதயநிதிக்கும் கை கொடுக்கவே செய்தது.

அரசியலுக்கு வருவதற்கு முன்னால், தந்தை மு.க.ஸ்டாலின் சார்பில், கட்சி அல்லாத நிகழ்ச்சிகள், கிராம சபைக் கூட்டங்களில், அவ்வப்போது தலைக் காட்டுவதை வழக்கமாக கொண்டிருந்தார் உதயநிதி. இதற்கிடையில் உதயநிதி அரசியலுக்கு வருவதற்கான நேரம் உருவாகத் தொடங்கியிருந்தது. 2015 டிசம்பரில் ஜெயலலிதா மறைந்த போது, உதயநிதி எழுதிய கவிதையும் அவர் அரசியலுக்கு வருவார் என்ற வாதத்துக்கு வலு சேர்த்தது. இந்த நிலையில் தான், 2016 ஆம் ஆண்டு தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் உதயநிதி போட்டியிடப் போவதாக தகவல் வெளியானது. உண்மையில் “இப்போது மட்டுமல்ல, எப்போதுமே அரசியலுக்கு வரமாட்டேன்” என்று கூறியிருந்தார் உதயநிதி. எனக்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை. நான் படங்கள் தயாரிப்பு, விநியோகம், நடிப்பு என போய்க் கொண்டிருக்கிறேன் எனக் கூறியிருந்தார். அப்படி கூறி ஓராண்டு நிறைவுற்ற தறுவாயில், 2017ல் திமுக செயல் தலைவராக பொறுப்பேற்றார் மு.க. ஸ்டாலின். ஸ்டாலின் பதவியேற்ற பிறகு உதயநிதியின் பாதை அவர் நினைத்ததற்கு நேர் மாறாக பயணிக்கத் தொடங்கியது.

அதற்கு அட்சாரம் போட்டது தாம்பரத்தில் நடந்த போராட்டம். அதிமுக ஆட்சியில் 2018ம் ஆண்டு பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது. அதனை கண்டித்து திமுக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தது. தாம்பரத்தில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற உதயநிதி “ திமுகவின் கடைசித் தொண்டனாக இந்த போராட்டத்தில் கலந்து கொண்டது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது” எனக் கூறினார். இதன் தொடர்ச்சியாக, கடலூரில் நடந்த கட்சி மாநாட்டிலும் கலந்து கொண்டார். இந்த நிகழ்வுக்குப் பிறகு, உதயநிதியின் அரசியல் பாய்ச்சல் அதிவேகமாக மாறியது. அதற்கு காரணம், ஜெயலலிதா, கருணாநிதி என அடுத்தடுத்து அரசியல் ஆளுமைகள் மறைந்ததால், தமிழ்நாடு அரசியலில் வெற்றிடம் உருவாகியுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்தனர். அந்த வெற்றிடத்தை தம்மால் மட்டுமே பூர்த்தி செய்ய முடியும் என்றும், அதனால் தாம் கட்டாயம் அரசியலுக்கு வரப்போவதாகக் கூறியிருந்தார் ரஜினி. கமல்ஹாசனோ ஒரு படி முன்னே சென்று மக்கள் நீதி மய்யத்தையே தொடங்கியிருந்தார்.

அரசியல் வெற்றிடம் யாருக்கு சாதகமாக அமையும் என பலரும் கணித்துக் கொண்டு  இருந்தனர். அந்த கணிப்பையெல்லாம் பொய்யாக்கி தமிழ்நாடு அரசியலில் வெற்றிடம் இல்லை என்பதை அடித்துக் கூறியது 2019ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவு. அதே நேரத்தில், உதயநிதிக்குத் தன்னை நிரூபித்துக் காட்ட, அந்த தேர்தல் ஒரு வாய்ப்பாகவும் அமைந்தது. உதயநிதியும் அந்த வாய்ப்பை இருகப்பற்றிக் கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும். கட்சியில் மூத்தவர்கள் பலர் இருந்தும், திமுகவின் தேர்தல் கால நட்சத்திரமாக மாறினார் உதயநிதி. அனைத்து தொகுதிகளிலும் வாக்கு கேட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இது சரிப்படுமா என்று சீனியர்கள் யோசித்த நேரத்தில், உதயநிதி களத்தில் அதகளம் செய்ய ஆரம்பித்தார்.

தேர்ந்த பேச்சாளர்கள், சீனியர்களே கையிலெடுக்காத விஷயங்களையெல்லாம் பேச்சில் கொண்டுவந்து, திமுக மேலிடத்தை ஆச்சரியப்படுத்தினார். தனது அத்தையும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழிக்காக, தூத்துக்குடி தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். எதார்த்தமான பேச்சால் சென்ற இடமெல்லாம் உதயநிதிக்கு ஆதரவு பெருகியது. தேர்தல் பரப்புரையில் திமுக தலைவர் ஸ்டாலினின் மகன் என்பதால் திடீரென்று அரசியலுக்கு வந்து விட்டார் என்ற விமர்சனம் எழுந்தது. இதற்கும் பதிலளித்த உதயநிதி, “நான் இன்றைக்கு அரசியலுக்கு வந்தவன் இல்லை என்று பதிலளித்தார். என்னோட உழைப்பால் வெற்றி பெற்று அந்த விமர்சனத்தை உடைப்பேன்” என்று சூளுரைத்தார்.

தேர்தல் முடிவுகள் திமுக கூட்டணிக்கு சாதகமாக அமைந்தது. ஒட்டுமொத்தமாக 38 இடங்களை அள்ளியிருந்தது திமுக கூட்டணி. கூட்டணி வெற்றிக்காக பாடுபட்ட உதயநிதி கட்சி பதவி கொடுக்க வேண்டும் என மூத்த தலைவர்கள் வலியுறுத்தினர். இதனை அடுத்து, உதயநிதியின் தேர்தல் பணியை பாராட்டி அவருக்கு இளைஞரணி செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. ஸ்டாலின் அளவுக்கு இளைஞரணியை வழிநடத்தும் தகுதி உடையவரா உதயநிதி என்றெல்லாம் கேள்விகள் எழுப்பப்பட்டது. ஆனால், கட்சிப் பதவியேற்றதும், இளைஞரணிக்குள் புது ரத்தம் பாய்ச்ச ஆரம்பித்தார் உதயநிதி.

இளைஞரணியின் மாவட்ட பதவிகளுக்கு நேரில் சென்று நேர்காணல் செய்தார். எல்லா மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு திமுகவின் சிறந்த களப்பணியாளர்களைத் தேர்வு செய்யத் தொடங்கினார். “பொய்ப்பெட்டி” என்ற நிகழ்ச்சியின் மூலம் திமுகவின் மீதான விமர்சனங்களையும், திமுகவின் அரசியல் வரலாற்றையும் இளைஞர்களிடம் கொண்டு சென்றார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நடந்த போராட்டத்தில் கைது, பிரச்சாரத்தில் இருந்த போது தடையை மீறி பிரச்சாரம் செய்ததாக கைது, குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய போது கைது என ஒரு வருட காலத்தில் பலமுறை சிறையை பார்த்திருந்தார் உதயநிதி. அடுத்தடுத்து செயல்பாடுகளால் கட்சியினர் பார்வை உதயநிதியின் மீது படத்தொடங்கியது. தன் மீதான விமர்சனங்களுக்கு தன் செயல்களாலேயே பதில் சொல்லிக் கொண்டிருந்தார் உதயநிதி. ஒரு கட்டத்தில் உதயநிதியின் செயல்களைக் கண்டு, கட்சியினர் அனைவரும் அவரை அரவணைத்துச் செயல்படத் தொடங்கினர்.

இரண்டாண்டு இடைவெளியிலேயே மக்களை அணுகவும், கட்சியினர், கட்சிக்குள்ளேயே எதிர்ப்பாளர்களையும் பக்குவமாகக் கையாள கற்றுக் கொண்டார். அப்போதே, நாடாளுமன்றத் தேர்தலில் சுற்றிச்சுழன்று தேர்தல் வெற்றிக்கு உழைத்த உதயநிதிக்கு, சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும், அமைச்சர் பதவி கிடைக்கும் என்றெல்லாம் பேச்சு அடிபட்டது. வாரிசு அரசியல் விமர்சனத்தில் சிக்கித் தவிக்கும் திமுகவிற்கு, இதுபோன்ற பேச்சுகள் மேலும் அழுத்தத்தைக் கொடுத்தன. ஆனால், தன்னை உயர்த்தி பேசுகிறார்களே என்பதற்காக புகழுரையில் மயங்கிடாமல், சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றி மட்டுமே கட்சியின் அடுத்த இலக்கு என்பதை உணர்ந்து திட்டமிட்டு களப்பணியாற்றினார் உதயநிதி.

ஒரு பக்கம் கொரோனா பெருந்தொற்றால் மக்கள் அவதியடைந்து கொண்டிருக்க, அதிமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என காத்திருக்காமல், பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை செய்வதில் கவனமுடன் செயல்பட்டனர் திமுகவினர். குறிப்பாக உயிருக்கு அஞ்சி வீட்டில் அமர்ந்திருக்கவில்லை. தொடர்ச்சியாக, நிவாரணப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டதால், ஜெ.அன்பழகன் போன்ற பலரை இழக்க நேர்ந்தது.

இந்த நிலையில் தான், தலைமைத் தேர்தல் ஆணையம், தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களுக்கு, 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியை அறிவித்தது. திமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக மு.க.ஸ்டாலினும், அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியும் களம் கண்டனர். ஆளும் கட்சியான அதிமுக மீண்டும் அரியணை ஏறுமா? அல்லது பத்து ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத திமுக கிரீடத்தை தட்டிப்பறிக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறியது.

உண்மையில், பாஜக எதிர்ப்பு அலைக்கு நடுவே, பாஜக கூட்டணியில் இருந்த அதிமுக, ஓரளவு ஸ்திரத்தன்மையோடே ஆட்சியை நடத்தியிருந்தது. உள்கட்சி விவகாரங்களையும் சமாளித்து, கிட்டத்தட்ட கட்சியையும் தன் வசப்படுத்தி இருந்தார் எடப்பாடி பழனிசாமி. கடந்தகால தேர்தல்களை போலல்லாமல், இந்த தேர்தல் பலமுனை போட்டி நிலவியதாக அமைந்திருந்தது. கமல்ஹாசன், சீமான், டிடிவி.தினகரன் என பலரும் அணி அமைத்து களம் கண்டனர்.

கட்சி ஆரம்பிப்பதாக சொன்ன ரஜினி, அரசியல் கட்சி ஆரம்பிக்காமலேயே அரசியலுக்கு முழுக்கு போட, சசிகலாவோ அரசியலில் இருந்தே விலகுவதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் தான், “ஸ்டாலின் தான் வர்ராரு, நல்லாட்சி தர போறாரு” என்ற முழக்கத்துடன் திமுகவும், வெற்றிநடை போடும் தமிழகம்” என அதிமுகவும் வாக்கு சேகரிப்பில் தீவிரம் காட்டின. இதனால் தமிழ்நாடு தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியது.

இப்படிப் பரபரப்புக்குப் பஞ்சமே இல்லாமல் இருந்த 2021 சட்டமன்றத் தேர்தலில், திமுக சார்பில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட உதயநிதிக்கு வாய்ப்பளித்தது கட்சி மேலிடம். தலைவரின் மகன் என்பதால், எளிதாக சீட் கிடைத்துவிட்டதாக வெளியில் பேசப்பட்டது. உதயநிதிக்கு விமர்சனங்களெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. ஏனெனில் கடந்த காலங்களிலும் இப்படி பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கிறார். அதனால், தேர்டல் வெற்றி ஒன்றே அவருக்கு குறிக்கோளாக இருந்தது. அதை நோக்கிய பயணத்துக்கும் தயாராக இருந்தார்.

2018ம் ஆண்டுக்கு முன்பெல்லாம், ஸ்டாலினை அப்பா என்றே பேசியிருந்த உதயநிதி, 2021 தேர்தல் களத்தில் தந்தையை தலைவர் என அழைக்க தொடங்கினார். அரசியல் என்று வந்துவிட்ட பிறகு, தந்தை- மகன் என்ற பாசத்திற்கு இடமில்லை. அனைவருமே கட்சி விதிகளுக்கு கட்டுப்பட்டுத்தான் ஆகனும் என்பதை போலிருந்தன உதயநிதியின் பேச்சு.

திமுக தலைவர் கருணாநிதியின் மகனாகவே இருந்தும், தான் போட்டியிட்ட முதல் தேர்தலில், தோல்வியையே தழுவினார் மு.க.ஸ்டாலின். அதனால், உதயநிதிக்கும் என்ன நடக்கும் என்ற கோணத்தில், பலரும் உதயநிதியின் தேர்தல் பரப்புரைகளை கவனிக்க ஆரம்பித்தனர். ஆனால், ஸ்டாலினை ஒப்பிடுகையில் குறுகிய காலத்திலேயே அரசியல் பலம் பெற்றிருந்தார் உதயநிதி என்பது, கட்சியிலிருந்தவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாக இருந்தது.

சட்டமன்றத் தேர்தலையொட்டி திமுக கூட்டணிக் கட்சிகளைப் பற்றிய சாதக பாதகங்கள், கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சீட்டு ஒதுக்கீடு போன்ற பட்டியலைத் தயார் செய்து, திமுக தலைமையிடம் ஒப்படைத்தார் பிரசாந்த் கிஷோர். அப்போது, உதயநிதியும் தன் சார்பில் ஒரு பட்டியலை தயார் செய்து, கட்சித் தலைமையிடம் ஒப்படைத்தார். அந்த பட்டியலில் திமுக 200 தொகுதிக்குக் குறைவில்லாமல் போட்டியிட வேண்டுமென்றும், கூட்டணிக் கட்சிகள் திமுகவின் உதயசூரியன் சின்னத்திலேயே தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்” என்பன போன்ற அம்சங்கள் இருந்ததாகக் கூறப்பட்டது. கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்ச வேண்டிய தேவை இருப்பதை உதயநிதி, தெளிவாக உணர்த்தியதாக அரசியல் வட்டாரங்கள் முணுமுணுக்கத் தொடங்கின.

திமுகவின் உட்கட்சி விஷயங்களில் அறிவார்ந்த யோசனைகளைக் கூறிய உதயநிதி தேர்தல் களத்தில் வேறு விதமாக இருந்தார். புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? என்பதை போன்றிருந்தது அவரது பாய்ச்சல். பரப்புரைகளில் அதிமுக அரசு வாக்குறுதி அளித்து நிறைவேற்றாமல் விட்டவற்றை நினைவூட்டினார். உதயநிதியின் சிறப்பே, பரப்புரைகளின் போது, மக்களிடம் சகஜமாக பேசுவதுதான். அதுதான், 2019 மக்களவைத் தேர்தலின் போதும் திமுகவுக்கு பெரிதாக பயன்பட்டது. 2021 சட்டமன்றத் தேர்தலின் போதும், இந்த பாணியையே கடைப்பிடித்தார் உதயநிதி. தமிழ்நாடு முழுவதும் திமுகவுக்காக தேர்தல் பரப்புரையை தொடங்கிய முதல் நாளே திருவாரூரில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார் உதயநிதி. பின்னர் விடுதலையானதும் மீண்டும் பரப்புரைக் களம் சூடுபிடித்தது.

இந்த தருணத்தில் பாஜக வேல் யாத்திரையை நடத்தியிருந்தது. இந்த தருணத்தில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பெயரில் திமுக தலைவர்கள் பரப்புரை பயணத்தை தொடங்கினர். தேர்தல் நெருங்க, பரப்புரையின் வீச்சும் அதிகரித்தது. மு.க.ஸ்டாலினுக்கு இணையாக உதயநிதிக்கும் கூட்டம் கூடியது.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதாக உறுதி அளித்துவிட்டு, எய்ம்ஸ் மருத்துவமனை ஏன் கட்டவில்லை என கேள்வி எழுப்பினார். குறிப்பாக சென்ற இடமெல்லாம், எய்ம்ஸ் என எழுதப்பட்ட ஒற்றை செங்கல்லை உயர்த்தி காட்டிய போது, அதிமுக, பாஜக கட்சிகளின் மீதான நம்பிக்கையை சுக்குநூறாக உடைத்தது போலிருந்தது. அத்தோடு நில்லாமல், மதிப்பிழப்பு செய்யப்பட்ட 1,000 ரூபாய் நோட்டுகளை கையோடு எடுத்துச் சென்று, பொதுவெளியில் உயர்த்திக் காட்டி அதிமுக, மற்றும் பாஜகவை பெரும் நெருக்கடிக்கு உள்ளாக்கினார்.

உதயநிதி களமிறங்கிய சேப்பாக்கம் தொகுதி அதிமுகவின் கூட்டணிக் கட்சியான பாமகவிற்கு ஒதுக்கப்பட்டிருந்தது. பாமக சார்பில் ஏ.வி.ஏ கசாலி போட்டியிட, பகுஜன் சமாஜ் கட்சி, நாம் தமிழர், அமமுக போன்ற கட்சிகளும் தொகுதியில் களத்திலிருந்தன. தமிழகத்தின் பிரதான கட்சியான அதிமுக, தன்னை நேரடியாக எதிர்க்கும் அரசியலை உருவாக்கியிருந்தார் உதயநிதி ஸ்டாலின். அதிமுக தலைவர்கள் உதயநிதியின் பெயரைச் சொல்லி நேரடியாக விமர்சனம் செய்யும் அளவிற்கு அரசியல் சூழல் மாறியிருந்தது.

வாரிசு அரசியல் என்று நினைத்தால், மக்கள் என்னைத் தோற்கடிக்கட்டும் என்று சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக வேட்பாளராக களமிறங்கிய போதே அதிரடியாக பேட்டியளித்து கவனம் ஈர்த்தார் உதயநிதி. உதயநிதியின் பேச்சாலும், செயலாலும் ஈர்க்கப்பட்ட அத்தொகுதி மக்கள், உதயநிதியை தங்கள் தொகுதியின் செல்லப்பிள்ளையாகவே பார்க்கத் தொடங்கினர். அது பொய்க்கவில்லை. தேர்தலில் அப்படியே எதிரொலித்தது. சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 2ல் நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் திமுக கூட்டணி பெருவாரியான இடங்களை கைப்பற்றி வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டன.

நாங்கள் சொல்வதைத்தான் செய்வோம், செய்வதைத்தான் சொல்வோம்” இந்த வசனத்தை ஸ்டாலின் அடிக்கடி பயன்படுத்தி கேட்டிருக்கலாம். ஆனால் இந்த வசனம் தந்தையை விட மகனுக்கே அதிகம் பொருந்தியது. சுமார் 68 சதவீத வாக்குகளை அள்ளினார் உதயநிதி. தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஏ.வி.ஏ கசாலியை விட, சுமார் 67,144 வாக்குகள் வித்தியாசத்தில், பிரம்மாண்ட வெற்றியை பெற்றிருந்தார். அடுத்து அமைச்சர் பதவிதான் என, பலரும் பலவாறு யூகிக்க, உதயநிதி பெயர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பட்டியலில் இடம்பெறவே இல்லை.

அப்போதுதான் பலரும் ஒன்றை புரிந்துகொண்டனர். உதயநிதி அரசியலில் அனுபவம் பெற வேண்டும் என்பதற்காகவே, அமைச்சர் பதவி வழங்காமல், விட்டதாக பேசப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, சட்டப்பேரவையில் தன் முதல் பேச்சை பதிவு செய்தார் உதயநிதி. சட்டமன்ற பேச்சின் தொடக்கத்திலேயே, திமுகவின் மூத்த தலைவர்கள், கூட்டணிக் கட்சியின் தலைவர்கள் என அனைவரையும் குறிப்பிட்டு நன்றி சொன்னது சபை நாகரிகத்தை எடுத்துக்காட்டியது.

நீட் தேர்வு குறித்த வாக்குறுதி என்னவானது? என்று சட்டமன்ற உறுப்பினராக உதயநிதி கேள்வி எழுப்ப, முதலமைச்சராக மு.க.ஸ்டாலினும் அதற்கு பதில் அளித்தார். உண்மையில், ஸ்டாலின் அரசியலுக்கு வந்தபோது அவருக்கு வயது 14. முதல்வர் பதவியை எட்டி பிடிக்கவும், கட்சிக்குள் முக்கிய பதவிகளை வகிக்கவுமே ஸ்டாலினுக்கு அரை நூற்றாண்டு காலமானது. ஆனால், உதயநிதிக்கு அந்த வாய்ப்புக்கள் மிக எளிமையாகக் கொடுக்கப்படுகிறது. மக்களிடம் குறுகிய காலத்தில் பலத்த வரவேற்பையும் பெற்றுவிட்டார் உதயநிதி. பாய்ச்சல் காட்ட வேண்டிய இடத்தில் பாய்ச்சல் காட்டுகிறார், பொறுமையாக இயங்க வேண்டிய இடத்தில் பொறுமை காக்கிறார் என்று, தொகுதி மக்களே புகழ்கின்ற வியந்து புகழ்கின்ற அளவுக்கு, உதயநிதி குறித்த வீடியோக்களை சமூக வளைத்தளத்திலும் பார்க்க முடிகிறது.

இந்த நிலையில் தான், உதயநிதிக்கு மேயர் பதவியோ, அல்லது அமைச்சர் பதவியோ கொடுக்கப்படலாம் என்ற பேச்சுகளும் உலா வருகின்றன. ஆனால், எதையும் காதில் போட்டுக் கொள்ளாமல், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் கவனம் செலுத்தி வருகிறார் சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி ஸ்டாலின்.

எம்ஜிஆருக்கு அடுத்து திரைத்துறையிலிருந்து அரசியலில் கோலோச்சும் கனவோடு வந்த சிவாஜி, ரஜினி என்று ஒரு பெரும் பட்டாளத்திற்கே அந்த கனவு, கானல் நீராக மாறிப்போனது. அப்படி ஒரு வாய்ப்பு கனிந்த விஜயகாந்த், உடல்நலக் குறைவால் ஓய்வெடுத்து கொண்டிருக்க,, களத்தில் இருக்கும் கமல்ஹாசனோ ஒரு சட்டமன்ற உறுப்பினரை பெறுவதற்கே போராடிக் கொண்டிருக்கிறார். ஆனால், எந்த கஷ்டமும் இல்லாமல், உதயநிதி தமிழ்நாடு அரசியலில் கோலோச்சி நிற்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவே பேசப்படுகிறது. அந்த வாய்ப்பு அமைந்தால், திமுகவின் மூன்றாம் கலைஞராக இன்னும் வீரியத்துடன் செயல்படுவார் உதயநிதி ஸ்டாலின். அதைத்தான், சட்டமன்ற உறுப்பினராக இப்போதே தொடங்கிவிட்டார் என பேசிக் கொள்கின்றனர் திமுகவினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தொழிலுநுட்ப கோளாறு; அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்

Jayasheeba

“பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ரூ.1000 கோடி வசூல் செய்யும்” – தயாரிப்பாளர் தனஞ்ஜெயன்

EZHILARASAN D

அசாம் வீரப்பன் சகாக்களால் சுட்டுக்கொலை

Vandhana