திருவல்லிக்கேணியில் இருசக்கர வாகனத்தில் வந்தவரை கத்தியால் குத்தி வழிப்பறி செய்து தப்பியோடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை திருவல்லிக்கேணி முக்தருனிஷா பேகம் தெருவை சேர்ந்தவர் சாகுல் அமீது (வயது 41). இவர் திருவல்லிக்கேணி OVM தெருவில் உள்ள தன்னுடைய நண்பரின் தங்கும் விடுதிக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, சிறிது தூரம் சென்றதும் அடையாளம் தெரியாத முகத்தில் முகக்கவசம் அணிந்து கொண்டு வந்த ஒருவர், சாகுல் அமீதை வழிமறித்துள்ளார்.
பின்னர் அவரை கீழே தள்ளி விட்டு கையில் வைத்திருந்த ஆயுதத்தால் சாகுல் அமீதை குத்தியுள்ளார். இதையடுத்து, அவரிடமிருந்து ஒரு லட்சம் ரூபாய் பணம் மற்றும் 69 கிராம் தங்க கட்டி, செல்போன், இருசக்கர வாகனத்தை பறித்து கொண்டு மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
படுகாயங்களுடன் சாலையில் துடித்து கொண்டிருந்த சாகுல் அமீதை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் தொடர்பாக திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாகுல் அமீது பணம், தங்கம் கொண்டு வருவதை தெரிந்த நபரே இதனை செய்திருக்க முடியும் என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கியுள்ள போலீசார், பாதிக்கப்பட்ட நபரும், வழிப்பறியில் ஈடுபட்ட நபரும் கடத்தல் தொழிலில் ஈடுபடும் குருவிகளா? தொழில் போட்டியால் இந்த சம்பவம் நடந்ததா? என்ற கோணத்தில் போலீஸ் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
-இரா.நம்பிராஜன்








