லியோ திரைப்படத்தின் முதல் பாடலான ‘நா ரெடி’ பாடலில் புகைப்பிடித்தல் தொடர்பான காட்சிகள் இடையே எச்சரிக்கை வாசகம் இணைக்கப்பட்டுள்ளது.
ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் லியோ. விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படம், அக்டோபா் மாதம் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. அண்மையில் நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு இந்தப் படத்தில் நடிகா் விஜய் பாடிய ‘நா ரெடி’ பாடல் வெளியிடப்பட்டது.
ரசிகர்களிடையே பெரும் வர்வேற்பை பெற்றாலும் பாடலில், போதைப் பொருள் பழக்கத்தை ஆதரிக்கும் வகையிலும், ரெளடியிசத்தை உருவாக்கும் வகையிலும் பாடல் உருவாகியிருந்ததாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதுதொடர்பாக நபர் ஒருவர் காவல்நிலையத்தில் வழக்கினை பதிவு செய்தார். பாடல் முழுவதும் நடிகர் விஜய் சிகரெட் பிடிக்கும் காட்சியும் இடம்பெற்றிருந்ததால் பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்தன.
இந்நிலையில், இப்பாடலின் துவக்கத்தில் ‘புகைப்பிடித்தல் புற்றுநோயை உண்டாக்கும் உயிரைக் கொல்லும்’ என்கிற எச்சரிக்கை வாசகத்தைப் படக்குழு இணைந்துள்ளது.








