சாத்தூரில் ஆசிரியையிடம் பறித்த தங்கச்செயினை விழுங்கி விட்டு, காட்டுப் பகுதியில் வீசியதாக நாடகமாடிய திருடனின் வயிற்றை ஸ்கேன் செய்து, போலீசார் கண்டறிந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர், சிதம்பரம் நகரைச் சேர்ந்தவர் அன்னலட்சுமி. பள்ளி ஆசிரியரான இவர் காலை வழக்கம் போல் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த இருவர், ஆசிரியர் அன்னலட்சுமி அணிந்திருந்த தங்கச்செயினை திடீரென பறித்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சுதாரித்த அன்னலட்சுமி இருசக்கர வாகனத்தில் இருந்தவாறே செயினைப் பிடித்துக் கொண்டு திருடர்களுடன் போராடினார். இதில், செயினின் ஒரு பகுதி திருடர்களின் கையிலும், ஒரு பகுதி அன்னலட்சுமி கையிலும் சிக்கியது. செயினை பறித்து கண்ட திருடர்கள் இருசக்கர வாகனத்தில் பறந்தனர்.
அப்போது அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த காவலர் ஒருவர் திருடர்களை விரட்டிச் சென்று சாத்தூர் சுப்பிரமணியபுரம் காட்டுப்பகுதியில் மடக்கிப் பிடித்தார்.
போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், செயின் பறித்தவர்கள் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே முண்டுவேலம்பட்டியை சேர்ந்த 23 வயதான முத்துப்பாண்டி மற்றும் 26 வயதான அழகுராஜ் என்பது தெரிய வந்தது. பின்னர் அவர்களிடம் அன்னலட்சுமியிடமிருந்து பறித்த ஒன்றே முக்கால் சவரன் தங்கசங்கிலியை குறித்து விசாரணை நடத்தினார். அதற்கு திருடர்கள் காட்டுப்பகுதியில் வீசியதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து போலீசார் அவர்களை நகையை வீசியதாக கூறி இடத்திற்கு அழைத்து சென்று நகையை தேடினர். அங்கு தேடியும் செயின் கிடைக்காததால் சந்தேகமடைந்த போலீசார், முத்துப்பாண்டியின் வயிற்றை தனியார் ஸ்கேன் மையத்திற்கு அழைத்து சென்று ஸ்கேன் செய்தனர்.
இதில், முத்துப்பாண்டி வயிற்றில் தங்கச்செயின் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து மருத்துவர்கள் ஆலோசனைப்படி செயின் வெளியே எடுத்தனர். இவர் மீது வழக்குபதிவு செய்த போலீசார் இது வேறு ஏதேனும் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டார்களா என விசாரணை நடத்தி வருகின்றனர்.