தொண்டனுக்கு ஒரு சட்டம்? ஒருங்கிணைப்பாளருக்கு ஒரு சட்டமா? என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்த பின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது பேசிய அவர், ஒற்றை தலைமை என்னும் கருத்து அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அதனால் அனைவரும் ஆதரவு கொடுத்து வருவதாகத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், திட்டமிட்டபடி செயற்குழு – பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் எனக் குறிப்பிட்டார். மேலும், ஓ.பி.எஸ் கடிதம் எழுதும் முறை தவறானது எனவும், வழக்கத்துக்கு மாறாக அவர் கடிதம் எழுதியுள்ளதாகக் கூறிய அவர்,
ஒ.பி.எஸ் எழுதிய கடிதம் எப்படி பத்திரிக்கையில் வெளியானது எனக் கேள்வி எழுப்பினார். ஒற்றை தலைமையில் இரு நல்ல விஷயம் இருப்பதால் தான் அதை வெளியே வந்து சொன்னதாகவும், வெளிப்படைத் தன்மை இருந்ததால் தான் வெளியே சொன்னதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், தொண்டர்கள் அனைவருக்கும் அது தெரிய வேண்டும் என்பதால் தான், ஒற்றை தலைமை பற்றிக் கூறியதாகவும், ஓ.பி.எஸ் கட்சியில் நீக்கப்பட்ட ஒருவருடன் தொடர்பில் உள்ளார், தொண்டனுக்கு ஒரு சட்டம்? ஒருங்கிணைப்பாளருக்கு ஒரு சட்டமா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.








