மாராஷ்ட்ராவில் ஆளும் சிவ சேனா கட்சியில் உட்கட்சிப் பிரச்னை வெடித்துள்ள நிலையில், மாநில அரசியலில் எத்தகைய மாற்றமும் ஏற்படலாம் என்று பாஜக தெரிவித்துள்ளது.
சிவ சேனாவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மாநில அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே, கட்சித் தலைமை மீது அதிருப்தி அடைந்து தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் குஜராத்தின் சூரத்துக்குச் சென்றுள்ளார். அவரோடு அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 15 பேர் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இது குறித்து மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய சிவ சேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், ஏக்நாத் ஷிண்டேவையும் சிவ சேனாவின் சில எம்எல்ஏக்களையும் தொடர்பு கொள்ள முடியாத நிலை உள்ளதாகத் தெரிவித்தார். உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்ட்ர அரசை கலைக்க பாஜக முயல்வதாகக் குற்றம் சாட்டிய அவர், அந்த முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது என்றார்.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தானில் நடந்ததுபோல், மகாராஷ்ட்ராவிலும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த பாஜக முயல்வதாகவும், ஆனால், அந்த மாநிலங்களைப் போன்றது அல்ல மகாராஷ்ட்ரா என்றும் அவர் குறிப்பட்டார்.
பாஜக தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டியுள்ள மகாராஷ்ட்ர காங்கிரஸ் தலைவர் நானா படோலி, நம்பிக்கையின்மையை நோக்கி நமது ஜனநாயகத்தை பாஜக நகர்த்துவதாக விமர்சித்தார். எனினும், உண்மை நிச்சயம் வெல்லும் என்றும் அவர் குறிப்பி்ட்டார்.
இந்நிலையில், மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநில தலைவர் சந்திரகாந்த் பாடீல், தற்போது ஏற்பட்டு வரும் மாற்றங்களை உண்ணிப்பாக கவனித்து வருவதாகவும், சிவ சேனாவில் நிலவும் குழப்பத்திற்கு சஞ்சய் ராவத்தின் அடாவடித்தனமான பேச்சுதான் காரணம் என்றும் குற்றம் சாட்டினார்.
மகாராஷ்ட்ர அரசியலில் மாற்றம் ஏற்படுமா என்ற கேள்விக்கு தற்போது பதில் அளிப்பது பொருத்தமாக இருக்காது என கூறிய அவர், அடுத்து என்ன நடக்கிறது என்பதை அறிய காத்திருப்பதாகக் கூறினார்.
ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஆட்சி அமைக்க பாஜக முன்வருமா என்ற கேள்விக்கு பதில் அளித்த சந்திரகாந்த் பாடீல், ஆட்சி அமைப்பது குறித்த திட்டம் எதையும் ஏக்நாத் ஷிண்டேவும் முன்வைக்கவில்லை; பாஜகவும் முன்வைக்கவில்லை என தெரிவித்த அவர், எனினும், அரசியலில் எதுவும் நடக்கும் என்றார்.
இந்நிலையில், மகாராஷ்ட்ராவில் இருக்கும் சிவ சேனா அரசை மாஃபியா அரசு என வர்ணித்துள்ள பாஜக மூத்த தலைவர் கீர்த்தி சோமையா, உத்தவ் தாக்கரே அரசின் நாட்கள் எண்ணப்படுகின்றன என தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.