தென்னிந்தியர்களுக்கு வேட்டி அடையாளமாக கூறப்படுவதுபோல், லுங்கியும் நம் ஆடையே என்பதே வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது. இந்த நிலையில் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ஜெய்பீம் பட சர்ச்சை தொடர்பாக புகார் கொடுக்க லுங்கி கட்டிக்கொண்டு சென்றவரை காவல்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி உள்ளே செல்ல அனுமதி மறுத்துள்ளனர். பின்னர் வறுமையில் வாடும் அவர் தன் சொந்த செலவில் புதிதாக வேட்டி வாங்கி கட்டி கொண்ட பின்னரே போலீஸ் கமிஷனரை பார்க்க அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் லுங்கி தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட ஆடையா ? என்ற கேள்வி எழுந்துள்ளது. லுங்கியின் வரலாறு என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.
தென்னிந்தியாவில் உருவான லுங்கி கட்டும் கலாச்சாரம் பிற்காலத்தில் பல்வேறு நாடுகளுக்கு பரவியுள்ளது. தெற்காசிய, தென் கிழக்கு ஆசிய நாடுகளிலும், ஏமன், ஓமான் போன்ற அரபு நாடுகளிலும், சோமாலியா, எத்தியோப்பியா போன்ற நாடுகளில் உள்ள ஆண்கள் இடுப்பில் அணிந்து கொள்ளும் ஆடையாகும். கேரளா போன்ற மாநிலங்களில் பெண்களும் அணிவதுண்டு. எத்தோப்பியா நாட்டில் அபார் என்ற பகுதியை சேர்ந்த ஆண்களும் இவ்வகை ஆடைகளை அணிவதை வழக்கமாக வைத்துள்ளனர். வெப்பமான நாடுகளில் கால்சட்டையை விட லுங்கி இதமானதாக உணரப்படுகிறது. பங்களாதேஷில் பரிதரா என்ற இடத்தில் லுங்கி அணிந்து வர தடை விதிக்கப்பட்டது. அதனை எதிர்த்து மக்கள் போராட்டம் வெடித்தது. உயர்நீதிமன்றம் தலையிட்ட பின்னரே அப்பிரச்சனையில் தீர்வு கிடைத்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் லுங்கி அணிந்து கொண்டு அலுவலகம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கடந்த 1989ஆம் ஆண்டு வாகன சட்டத்தின்படி லாரி ஒட்டுநர்கள் லுங்கி அணிய தடை உள்ளது. இந்த விதியை பயன்படுத்தி உத்தரபிரதேசத்தில் காவல்துறை அதிகாரிகள் அபராதம் விதித்தனர். அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இருப்பினும் அச்சட்டம் இன்னமும் நடைமுறையில் உள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த பாஜக மாநில இளைஞரணி துணைத் தலைவர் டாக்டர் டி ராஜசேகர், அரசு அதிகாரிகளை சந்திக்க வரும் பொதுமக்களுக்கு ஆடைகட்டுப்பாடு என்பது கிடையாது. இதனை பற்றியெல்லாம் அறிந்து கொள்ளாமல் புகார் கொடுக்க வந்தவரை காவல்துறை அதிகாரிகள் திருப்பி அனுப்பியது கண்டிக்கத்தகது என்றார்.மேலும் அவர், நம் நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளாகியும், இன்னமும் அடிமைத்தனத்துடன் பொதுமக்கள் இருக்க வேண்டும் என அதிகாரிகள் கருதுவது வன்மையாக கண்டிக்கதக்கது என்றார்.
இராமானுஜம்.கி