தெலங்கானாவில் சூப்பர் மார்க்கெட்டில் சாக்லேட் எடுப்பதற்காக, ஃபிரிட்ஜை திறந்த நான்கு வயது சிறுமி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம், நவிப்பேட்டையை சேர்ந்த ராஜசேகர் என்பவர், தனது நான்கு வயது மகள் ருஷிதாவுடன், அருகில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்றார். அப்போது சாக்லேட் எடுப்பதற்காக, சூப்பர் மார்க்கெட்டில் உள்ள பிரிட்ஜை சிறுமி ருஷிதா திறந்தபோது, அவர்மீது மின்சாரம் பாய்ந்தது.
அசைவின்றி நின்ற சிறுமி ருஷிதாவை, மற்றொரு ஃபிரிட்ஜில் பொருட்களை எடுத்துக் கொண்டிருந்த ராஜசேகர் இழுத்து கீழே தள்ளி, அவரை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு ருஷிதாவை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
இதையும் படியுங்கள் : ஊதியம் தராமல் மிரட்டுவதாக புகார் – தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க ஆசிரியர்கள் கோரிக்கை
சிறுமியின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளது.







