செங்கல்பட்டு பா.ம.க நகரசெயலாளர் கொலை சம்பவம் தொடர்பாக தப்பியோடிய ஒருவரை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.
செங்கல்பட்டு மக்கான் சந்து பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (46). இவர் பாட்டாளி மக்கள் கட்சியின் செங்கல்பட்டு நகர செயலாளராக பதவி வகித்து வந்தார். இவர் மணிக்கூண்டு அருகே பூ வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் வழக்கம் போல வியாபாரம் முடித்து விட்டு இரவு வீட்டுக்கு செல்ல முயன்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் நாகராஜை வெட்டினர். இதில் நாகராஜ் பலத்த காயமடைந்தார். இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் அவரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார். கொலையில் தொடர்புடையவர்கள் பரனூர் வழியாக சென்றதாக வந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது புலிபாக்கம் ரயில்வே பாதை அருகே சந்தேக நபரை போலீசார் சுற்றி வளைத்தனர்.
அவர் போலீசாரை தாக்க முயன்றதால் அவரை சுட்டு பிடித்தனர். இதனையடுத்து நிலை தடுமாறிய சின்னநத்தத்தை சேர்ந்த அஜய் என்பவரை காவல்துறையினர் கைது செய்து சிகிச்சைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் டிஎஸ்பி ஜூலியஸ் சீசர் தலைமையில் 15க்கும் மேற்பட்ட காவலர்கள் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.மற்றொருவர் செங்கல்பட்டு அருகே கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வடக்கு மண்டல காவல்துறை துணை தலைவர் பகலவன் மற்றும் செங்கல்பட்டு எஸ். பி உள்ளிட்டோர் கொலை நடந்த இடத்தை ஆய்வு மேற்கொண்டனர்.






