கஜினி திரைப்படத்தின் கதை தன்னிடம் தான் முதலில் சொல்லப்பட்டதாக நடிக்க மாதவன் தெரிவித்துள்ளார்.
நடிகர் மாதவன் முதல் முறையாக இயக்கி நடித்துள்ள திரைப்படம் ராக்கெட்ரி – நம்பி விளைவு. விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை தழுவி இப்படத்தை மாதவன் இயக்கியதோடு நம்பி நாராயணனை போலவே தன்னையும் மாற்றிக்கொண்டு நடித்துள்ளார். திரையரங்கில் வெளியாகியுள்ள இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் நடிகர் சூர்யாவும் ஒரு முக்கிய கதாப்பத்திரத்தில் நடித்துள்ளார். விஞ்ஞானி நம்பி நாராயணன் கதை என்பதால் சம்பளம் எதுவும் பெறாமல் நடித்துள்ளார். 
ராக்கெட்ரி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் நடிகர் மாதவனும், சூர்யாவும் இணைந்து இன்ஸ்டாகிராமில் உரையாடினர். சினிமா வாழ்க்கை, குடும்பம், ராக்கெட்ரி படம் என இருவரும் தங்களின் மனம்விட்டு பேசினர். ராக்கெட்ரி படத்தின் படபிடிப்பு தளத்தில் நம்பி நாராயணனை போலவே இருந்த மாதவனை பார்த்து நடிகர் சூர்யா பேச முடியாமல் ஆச்சரியமாக பார்த்தார்.அப்போது பேசிய மாதவன் முதல் முறையாக ரகசியத்தை உடைத்தார்.
ஒரு காலத்தில் என்னுடைய திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அப்போது ஜாலியாக சுற்றிக்கொண்டு இருந்தேன். இந்த நேரத்தில் ஒரு உண்மையை உங்களிடம் சொல்ல வேண்டும். கஜினி திரைப்படம் முதலில் தனக்குத்தான் வந்ததாகவும் ஆனால் அந்த படத்தின் இரண்டாம் பகுதி கதை தனக்கு பிடிக்கவில்லை என்பதால் இயக்குனர் முருகதாஸ் இடம் அதில் நடிக்க விருப்பமில்லை என மறுத்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். 
ஆனால் அதில் சூர்யாவின் ஈடுபாட்டையும் அந்த படத்திற்காக நீங்கள் செய்த முயற்சிகளையும் பார்த்து இனிவரும் காலங்களில் நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்று கற்றுக்கொண்டதாகவும் மாதவன் கூறினார். இவரும் கண் கலங்கியவாறு தங்களின் கருத்துகளை பகிர்ந்து கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
– தினேஷ் உதய்








