மன உளைச்சலில் துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்து கொண்ட பெண் காவலர் – நாகையில் பரபரப்பு!

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் காவலர் மன உளைச்சலில் துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் மணகுடியை அடுத்த கீழிருப்பு பகுதியை சேர்ந்தவர் அபினயா 29. இவர் நாகப்பட்டினம் மாவட்ட ஆயுதப்படையில் பெண் காவலராக பணியாற்றி வந்துள்ளார். திருமணம் முறிவு ஏற்பட்டு ஆயுதப்படை குடியிருப்பில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இதனிடையே அபிநயா நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட கருவூலத்தில் துப்பாக்கியுடன் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து நேற்று இரவு வழக்கம் போல் மாவட்ட கருவூலத்திற்கு அவரும் மற்றொரு பெண் காவலரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் இன்று காலை 6 மணி அளவில் அபிநயா துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு உயிரை மாய்த்து கொண்டுள்ளார். துப்பாக்கி சத்தம் கேட்டு அருகில் இருந்த பெண் காவலர் வெளியில் வந்து பார்த்தபோது அபிநயா ரத்த வெள்ளத்தில் சுருண்டு கிடந்துள்ளார்.

இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு பெண் காவலர் அளித்த தகவலின் பேரில் ஆயுதப்படை டிஎஸ்பி நாகூர் இன்ஸ்பெக்டர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு உடலை கைப்பற்றி நாகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த நாகப்பட்டினம் மாவட்ட
காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அனைத்து கதவுகளையும் பூட்டி விசாரணை மேற்கொண்டார்.

மன உளைச்சலில் இருந்த பெண் காவலர் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் நாகை போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த கூடுதல் தகவலில் ஆயுதப் படையில் பணியாற்றிய வினோத் என்பவர் கடந்த ஒன்றாம் தேதி தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். வினோத்திற்கும், அபிநயாவிற்கும் திருமணத்தை தாண்டிய உறவு இருந்துள்ளது. இதன் காரணமாக மன உளைச்சலில் இருந்த அவர் 15 நாள் விடுப்பிற்கு பின் கடந்த 5 நாட்களுக்கு முன் மீண்டும் பணியில் சேர்ந்துள்ளார். இந்த நிலையில் அபிநயா இன்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.