கோவை மாவட்டம், ஆனைக்கட்டியை அடுத்த தமிழக – கேரள எல்லையில் மலையில் இருந்து தவறி விழுந்து பெண் யானை உயிரிழந்தது.
கோவை மாவட்டம், ஆனைக்கட்டியை அடுத்த கேரள பகுதியான அட்டப்பாடி, அகழி, சைலெண்ட் வேலி உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகளின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. இந்த யானைகள் உணவு தேடியும், வலசை செல்லவும் தமிழக – கேரள வனப் பகுதிக்குள் சென்று வருவது வழக்கம்.
இந்நிலையில், அட்டப்பாடி மலைப் பகுதி வழியாக யானைக் கூட்டம் நேற்று இரவு வந்துள்ளது. அப்போது, மலையின் விளிம்பில் யானை கூட்டம் சென்றபோது கால்தவறி பெண் யானை மலைப் பாதையில் சறுக்கி விழுந்தது. இதில், அந்தப் பெண் யானை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் அட்டப்பாடி வனத் துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து, இன்று காலை சம்பவ இடத்துக்குச் சென்ற வனத் துறையினர் யானையின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். வனத் துறையினர் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மலைப் பாதையில் யானை தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-ம.பவித்ரா








