தடைகள் பல கடந்து தேசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார் விவசாயி மகன் பிரவீன் சித்திரவேல்.
36 வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் குஜராத் மாநிலத்தில் உள்ள ஆமதாபாத்
காந்திநகர், சூரத்வதோரா, ராஜ்கோட், பவநகர், ஆகிய நகரங்களில் நடைபெற்று
வருகிறது. நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களை சேர்ந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட
வீரர்கள் இதில் பங்கேற்றனர்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே செட்டிசத்திரம் கிராமத்தைச் சேர்ந்த
விவசாயி சித்திரவேல் மகன் 21 வயாதான் பிரவீன். இவர் ஆண்கள் தடகள பிரிவுக்கான மும்முனை தாண்டுதலில் 16.68 மீட்டர் நீளம் தாண்டி சாதனை படைத்து தங்கம்
வென்றுள்ளார்.
இதற்கு முன்பு இந்த ஆட்டத்தில் 2015 ஆம் ஆண்டு விளையாடிய ரஞ்சித் மகேஸ்வரி
16.66 மீட்டர் தாண்டியது சாதனையாக இருந்து வந்தது. அதனை முறியடித்து பிரவீன்
சித்திரவேல் 16.68 மீட்டர் தாண்டி சாதனை படைத்து தங்கப்பதக்கம் வென்று
உள்ளார்.
நினைத்ததை அடைவதற்கு எதுவும் தடை இல்லை என்பதற்கு பிரவீன் ஓர் சிறந்த
முன்னுதாரணம். ஏனெனில் இவரது குடும்பம் வறுமையால் தவித்து வருகிறது. பிரவீன்
தந்தை சித்திர வேல் ஒரு கபடி விளையாட்டு வீரர். ஆனால் அவரால் பெரிய அளவில்
சாதிக்க முடியவில்லை. கிராமத்தில் விவசாய வேலை செய்து தனது குடும்ப வாழ்க்கையை நடத்திவரும் இவர் குடும்ப கஷ்டங்களை சொல்லி சொல்லியே அவரது மூன்று பிள்ளைகளையும் வளர்த்து வந்தார்.
பிரவீனின் பள்ளி ஆசிரியர்கள் கட்டிகொடுத்த சிறிய ஓட்டு வீட்டில் தான் பிரவீன் குடும்பம் தற்போது வாழ்ந்து வருகின்றனர். கிராமத்தில் பிறந்தோம் ஏழையாக வாழ்கிறோம் என்ற தாழ்வு மனப்பான்மையை உடைத்தெறிந்து பிரவீன் சித்திரவேல் பெற்றிருக்கும் வெற்றி அவரை போல் ஏராளமான மாணவர்கள், இளைஞர்கள், இந்த கிராமத்தில் சிறந்த விளையாட்டு வீரர்களாக உருவாக்க ஊக்கமளித்துள்ளது. செட்டி சத்திரம் எனும் இந்த ஒரு கிராமத்தில் மட்டுமல்ல அருகில் உள்ள வடுவூர், எட மேலையூர் தென்பாதி போன்ற இப்பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களிலும் கால்பந்து கைப்பந்து நீளம் தாண்டுதல் போன்ற பலவிதமான விளையாட்டுகளில் உலக அளவில் தேசிய அளவிலும் வெற்றி பெற்ற வீரர்கள் அதிகம் நிறைந்த கிராமங்களாக இப்பகுதி மெல்ல மெல்ல மாறி வருகிறது.








