வெள்ளித்திரையில் அடியெடுத்து வைக்கும் பிரபல பட்டிமன்ற பேச்சாளர்!

பட்டிமன்ற பேச்சாளராக மக்கள் மத்தியில் பிரபலமாகி, வெள்ளித்திரையில் அடியெடுத்து வைத்தவர்கள் பட்டியலில் கவிஞர் மோகனசுந்தரம் இணைந்துள்ளார். இதுதொடர்பான செய்தித்தொகுப்பை தற்போது பார்க்கலாம். பொழுதுபோக்கோடு அரசியல், விழிப்புணர்வு, பயனுள்ள தகவல்கள் உள்ளிட்ட பல அம்சங்களும் நகைச்சுவை…

பட்டிமன்ற பேச்சாளராக மக்கள் மத்தியில் பிரபலமாகி, வெள்ளித்திரையில் அடியெடுத்து வைத்தவர்கள் பட்டியலில் கவிஞர் மோகனசுந்தரம் இணைந்துள்ளார். இதுதொடர்பான செய்தித்தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

பொழுதுபோக்கோடு அரசியல், விழிப்புணர்வு, பயனுள்ள தகவல்கள் உள்ளிட்ட பல அம்சங்களும் நகைச்சுவை குன்றாமல் பட்டிமன்றங்களில் விருந்து படைப்பதால் அவற்றுக்கு பெரும் ரசிகர் பட்டாளங்களே உண்டு.

பட்டிமன்றத்தில் தங்களுக்கென தனி அடையாளம் உருவாக்கியவர்களுக்கு திரைத்துறை சிவப்புக் கம்பளம் விரிக்கத் தவறியதில்லை. அந்த வரிசையில் தம்முடைய தனித்துவமான குரல்வளம், நகைச்சுவை மூலம் 1997ம் ஆண்டு வெளியான கங்கா கவுரி திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார் திண்டுக்கல் ஐ.லியோனி.

2003ம் ஆண்டு சங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தில் நீதிபதி வேடத்தில் தோன்றிய சாலமன் பாப்பையா, ரஜினி நடித்து பெரும் வெற்றி பெற்ற சிவாஜி திரைப்படத்தில், தமது சக பட்டிமன்ற பேச்சாளர் ராஜாவுடன் சேர்ந்து காமெடியில் அதகளம் செய்தார்.கமல்ஹாசன் நடித்த விருமாண்டி திரைப்படத்தில் அறிமுகமான பட்டிமன்ற பேச்சாளரும், பேராசிரியருமான ஞானசம்பந்தம் இதுவரை சுமார் 35 திரைப்படங்களில் நடித்திருப்பதுடன் சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகிறார்.

இவர்கள் வரிசையில் தற்போது இணைந்திருப்பவர் கவிஞர் மோகனசுந்தரம். தன்னுடைய இயல்பான நகைச்சுவை பேச்சு மூலம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ள இவர் ஒரு தனியார் மருத்துவமனையில் நிர்வாகத்துறையில் பணியாற்றி வருகிறார்.

நியூஸ் 7 தமிழில் பண்டிகை மற்றும் சிறப்பு தினங்களில் ஒளிபரப்பப்பட்ட பல்வேறு பட்டிமன்றங்களில் பங்கேற்று தன்னுடைய நகைச்சுவை பேச்சு மூலம் பார்வையாளர்களை ஈர்த்த இவருக்கு, திரைப்படத்தில் நடிக்க ஏற்கனவே வாய்ப்புகள் வந்துவிட்டாலும், கதாபாத்திரம் பிடிக்காமலும் வேறு சில காரணங்களாலும் அந்த வாய்ப்புகளைத் தவிர்த்தார்.

இந்நிலையில், அஜித்குமாரை வைத்து இயக்குநர் எச்.வினோத் இயக்கிய துணிவு திரைப்படம் மூலம் வெள்ளித்திரையில் தமது என்ட்ரி கார்டை போட்டுள்ளார், மோகனசுந்தரம். பொங்கலுக்கு வெளியாக உள்ள இந்த திரைப்படத்தில் நடித்துள்ளவர்களை விளம்பரப்படுத்தும் நோக்கில் படக்குழுவினர் அவர்களின் கதாபாத்திர பெயர்களை வெளியிட்டனர். அதில் முதல் புகைப்படமாக வெளியானது மோகனசுந்தரத்தின் புகைப்படம்.

துணிவு படத்தில் மை பா எனும் கதாபாத்திரத்தில் மோகனசுந்தரம் நடித்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த கதாபாத்திரம் மூத்த பத்திரிகையாளர் மை பா நாராயணன் தான் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

தம்முடைய முதல் படத்திலேயே நடிப்பதற்கு நல்ல வாய்ப்புள்ள கதாபாத்திரத்தில் அறிமுகமாகும் மோகனசுந்தரம் திரையுலகில் ராஜநடை போடுவார் என எதிர்பார்க்கலாம்.

  • முதன்மை செய்தியாளர் அன்சர் அலி, நியூஸ் 7 தமிழ்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.