சென்னையில் கடும் பனிமூட்டம்; 14 விமானங்களின் சேவை பாதிப்பு

சென்னையில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக இன்று 14 விமான சேவைகள் பாதிக்கப்பட்டது.  தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. உதகையில் கடும பனிமூட்டம் காரணமாக மினி…

சென்னையில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக இன்று 14 விமான சேவைகள் பாதிக்கப்பட்டது. 

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. உதகையில் கடும பனிமூட்டம் காரணமாக மினி காஷ்மீர் போன்று காட்சியளித்து வருகிறது. இதேபோல், சென்னை, சீர்காழி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல பகுதிகளில் கடும் பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

பனிமூட்டம் காரணமாக சென்னையில் 14 விமானங்களின் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. சென்னை புறநகர் பகுதிகளில் இன்று காலையில் கடுமையான பனிமூட்டம் இருந்தது. இதனால் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் ஓடுபாதை சரியாக தெரியவில்லை என்று மும்பையில் இருந்து 129 பயணிகளுடன் காலை 8 மணிக்கு சென்னை வந்த, மும்பை விமானம் பனிமூட்டம் காரணமாக வானத்தில் வட்டமிட்டது.

பின்னர் தரையிறங்க முடியாமல் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டது. அதேபோல் மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சென்னை வந்த இரண்டு விமானங்கள், பெங்களூரூ, கொல்கத்தா, கோவை, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களில் இருந்து வந்த விமானங்களும் வானத்தில் வட்டமடித்து அரை மணி நேரத்திற்கு பிறகு தாமதமாக தரையிறங்கின.

அதே போல் சென்னையில் இருந்து மஸ்கட், லண்டன், கோலாலம்பூர், கொல்கத்தா உள்ளிட்ட ஏழு நகரங்களுக்கு செல்லவிருந்த விமானங்களும் தாமதமாக புறப்பட்டு சென்றன. பனிமூட்டம் காரணமாக விமானம் தாமதம் என்பது விமான நிலையங்களுக்கு வந்த பிறகே பயணிகளுக்கு தெரியவந்ததால் அவதிக்குள்ளாகினர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.